9-வது நாளாகத் தொடரும் ஆண்டிபட்டி நெசவாளர் போராட்டம்… ரூ.2 கோடி மதிப்பிலான சேலை உற்பத்தி பாதிப்பு!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி, கோப்பயன்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 5,000 குடும்பங்கள் விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 14 கூட்டுறவு சங்கங்கள் அமைத்து தொழில் நடந்து வந்த பகுதியில், தற்போது 4 சங்கங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. ஒப்பந்த அடிப்படையில் சேலைகள் உற்பத்தி செய்து கொடுக்கும் இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. 

தறி

கடந்த டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு புதிய கூலி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. இதனால்  டி.சுப்புலாபுரத்தில் விசைத்தறி நெசவாளர்கள் கூலி உயர்வு, போனஸ் உட்பட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 2-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இதனால் நாள் ஒன்றுக்கு இருபது லட்சம் ரூபாய் மதிப்பிலான சேலை உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது வரை சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான சேலை உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது. 

தமிழக அரசு சார்பில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் தொழிலாளர் நலவாரிய இணை இயக்குநர் கோவிந்தன் நெசவுத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எந்தவித முடிவுகளும் எடுக்கப்படாத நிலையில், ஐனவரி 12-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. இதற்கிடையே நெசவுத் தொழிலாளர்கள், பொங்கல் தினத்தன்று கறுப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யப்போவதாக அறிவித்திருக்கின்றனர். 

தறி

இது குறித்து ஏ.ஐ.டி.யூ.சி தேனி மாவட்ட நெசவாளர் சங்க பொதுச்செயலாளர் சென்றாயப்பெருமாளிடம் பேசினோம். “கடந்த முறை போடப்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இரண்டு வாரங்கள் மட்டும் சரியாக ஊதியத்தை கொடுத்துவிட்டு, `விருப்பம் இருந்தால் பாருங்கள், இல்லையேல் வேறுபகுதி ஆட்களை வைத்து வேலை செய்து கொள்கிறோம்’ என மிரட்டினர். ஒரு நபர் 120 ரூபாய் சேலைகள் ஒரு நாளைக்கு 4 உற்பத்தி செய்யமுடியும். 300 ரூபாய் சேலைகள் ஒரு நாளைக்கு 2 உற்பத்தி செய்ய முடியும். 

சென்றாயப்பெருமாள்

வாரந்தோறும் திங்கள்கிழமை எங்களுக்கு ஊதியம் கொடுப்பார்கள். தற்போது 50 சதவிகித ஊதிய உயர்வு கோருகிறோம். அதில் 15 முதல் 20 சதவிகிதம் வரை கிடைத்தால்கூட ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். அதேபோல 20 சதவிகித போனஸ், ஆஜர் பதிவேடு முறை, குடிநீர், கழிப்பிட வசதி, தேசிய விடுமுறை நாள்களில் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். இ.எஸ்.ஐ, பஞ்சப்படி, இன்சூரன்ஸ், தொழிலாளர் நல நிதி செலுத்தும் முறைகளை கொண்டுவர வேண்டும்” என்றார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.