கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அருகே வில்லுக்குறியை அடுத்துள்ள குதிரை பந்திவிளையைச் சேர்ந்தவர் சித்த வைத்தியர் செல்வஜார்ஜ். இவர் ஊர் ஊராக மிதிவண்டியில் சென்று சித்த மருத்துவம் செய்து வந்தார்.
இவர் மனைவி மரிய தங்கம். இவர் கடந்த மாதம் 23 -ந் தேதி உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். இதனால் மன வேதனை அடைந்த செல்வஜார்ஜ், மனைவியின் இறுதி சடங்கு நடந்தபோது, உறவினர்களிடம் இரண்டு குழிகள் தயார் பண்ணுங்கள் என்றுத் தெரிவித்துள்ளார்.
மனைவி இறந்த மனவருத்ததினால் இவ்வாறு பேசுகிறார் என்று உறவினர்கள் நினைத்த போது தான், அவர் விஷம் அருந்தி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை உறவினர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதன் பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவரது மகன் அஜிஸ் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.