கோல்டன் குளோப் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் – பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதினை வென்றுள்ளதை அடுத்து, படத்தின் இசை அமைப்பாளர் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”கோல்டன் குளோப் விருது வென்றிருப்பது மிகவும் சிறப்பான சாதனை. இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, பிரேம் ரக்‌ஷித், கால பைரவா, சந்திரபோஸ், ராகுல் சிப்லிகுஞ்ச் ஆகியோருக்கு பாராட்டுக்கள். எஸ்.எஸ்.ராஜமவுலி, ராம் சரண் உள்பட ஆர்ஆர்ஆர் படத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். இந்த மதிப்புமிக்க கவுரவம் ஒவ்வொரு இந்தியரையும் மிகவும் பெருமைப்படுத்தி உள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் விருதுக்கு அடுத்த உயரிய விருதாக திரைத் துறையினரால் கருதப்படுவது கோல்டன் குளோப் விருது. விருது வழங்கும் விழா Hollywood Foreign Press Association சார்பில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது.

இந்த விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் ஆங்கில மொழி அல்லாத படத்திற்கான பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படமும், பாடலுக்கான பிரிவில் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடலும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், ‘நாட்டு நாட்டு’பாடல், சிறந்த பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதினை வென்று அசத்தியுள்ளது.

இந்தப் பாடலுக்கு எம்.எம். கீரவாணி இமை அமைந்திருந்தார். பாடகர்கள் ராகுல் சிப்லிகுஞ்ச், கால பைவரவா ஆகியோர் பாடி இருந்தனர். இந்தப் பாடலுக்கு பிரேம் ரக்‌ஷித் நடன இயக்குநராக இருந்துள்ளார். பாடலை சந்திரபோஸ் எழுதி இருந்தார். துள்ளல் நிறைந்த இப்பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.