இன்றைய காலகட்டத்தில் மக்கள் வங்கிகளின் இணைய சேவைகளை விட அதிகளவில் UPI சேவைகளையே பயன்படுத்தி வருகின்றனர். மால்களின் உள்ள பெரிய கடை முதல், தெருவோர காய்கறி வியாபாரிகள் வரை எங்கு பார்த்தாலும் UPI பரிவர்த்தனைக்கான QR கோடுகள் போர்டினை காண முடிகிறது. இந்நிலையில், இதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில், சிறிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ரூ.2600 கோடி ஊக்கத்தொகை வழங்க மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், ரூபே டெபிட் கார்டு மற்றும் BHIM – UPI பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் ஊக்கத் திட்டத்துக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகக் கூறினார். இதனுடன், பல நிலை கூட்டுறவு சங்கங்கள் மூன்று அமைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில், ‘ரூபே டெபிட் கார்டு மற்றும் BHIM-UPI மூலம் தனிநபர்கள் மற்றும் வணிகர்களிடையே சிறிய அளவிலான பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் ஊக்கத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.’ என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனுடன், பிரதமர் இலவச உணவு திட்டம் என்ற பெயரை மாற்ற மோடி அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இனி இந்த திட்டத்தின் பெயர் PM Garib Kalyan Anna Yojana என அழைக்கப்படும். முந்தைய அமைச்சரவையில் இலவச உணவு திட்டம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், பல மாநில கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் 2002-ன் கீழ் தேசிய அளவிலான பல மாநில கூட்டுறவு ஏற்றுமதி சங்கம் அமைக்க மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகக் கூறினார். கூட்டுறவுகளின் உள்ளடக்கிய வளர்ச்சி மாதிரியின் மூலம் கூட்டுறவு துறை வளர்ச்சி அடைந்து இலக்கை அடைய இது உதவும்.
உணவுத் திட்டத்தின் காலம் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கோவிட்-19 தொற்றுநோய்களின் போது ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் விநியோகம் 2020 ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது. கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.