திருமலை: சென்னையில் இருந்து சென்ற வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு ‘வந்தே பாரத்’ ரயில் சேவை வரும் 15ம்தேதி தொடங்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து ‘வந்தே பாரத் ரயில்’ செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பின்னர் அங்கிருந்து நேற்று சோதனை ஓட்டமாக விசாகப்பட்டினம் வரை இயக்கப்பட்டது. அப்போது விசாகப்பட்டினம் ரயில் நிலையம் அருகே உள்ள மர்ரிபாலம் வழியாக நேற்றிரவு சென்றபோது மர்மநபர்கள் சிலர், ரயில் மீது சரமாரி கற்களை வீசினர். இதில் ரயிலின் 2 ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமானது. இதுகுறித்த புகாரின்பேரில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து சிசிடிவி காட்சிகளை ைவத்து தேடிவந்தனர். கற்கள் வீசியதாக விசாகப்பட்டினத்தை சேர்ந்த சங்கர் (22), திலிப் (22), சந்து (25) ஆகிய 3 வாலிபர்களை நள்ளிரவு கைது செய்தனர். அவர்கள் எதற்காக கற்கள் வீசினார்கள்? அவர்கள் பின்னணியில் யாரேனும் உள்ளார்களா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.