சேது சமுத்திரத் திட்டம்; தனித் தீர்மானம் கொண்டுவந்த முதல்வர்; பாஜக உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு

இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. நான்காவது நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டுமென தனித் தீர்மானம் கொண்டுவந்தார். பா.ஜ.க உட்பட அனைத்துக் கட்சிகளும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில்,” சேது சமுத்திரத் திட்டத்தை இந்த சட்டமன்றத்தில் முன்மொழிவதை வரலாற்றுக் கடமையாக கருதுகிறேன். முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணாவுடைய கனவு திட்டமும், டாக்டர் கலைஞர் நிறைவேற்ற பாடுபட்ட திட்டம் இது. மேலும், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையில் 1963-ம் ஆண்டு அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, ஐந்து திட்டங்களில் 4-வதாக இடம் பெற்ற திட்டம் இது.

மோடி – ஸ்டாலின்

1967-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அண்ணா, தம்பிக்கு எழுதிய மடலில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றியாக வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் வர்த்தகம் பெருகும். இலங்கையை சுற்றிக்கொண்டு கப்பல் போக வேண்டிய நீளம் குறையும். இங்கே இருக்கும் மீனவர்களுடைய வாழ்வு செழிக்கும். தமிழ்நாடு எல்லா வளமும் கொண்ட மாநிலமாக மாறும் என்று அண்ணா எழுதியிருக்கிறார். இந்த திட்டத்தை நிறைவேற்றி தரும்நாளை எழுச்சி நாளாக கொண்டாடுவது என்றும் அறிவித்தார்.

1972-ம் ஆண்டு தூத்துக்குடி துறைமுக நுழைவாயிலில், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் சிலையை திறந்து வைக்க, பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது, தூத்துக்குடி துறைமுகத்தின் பயன் மேலும் வளர வேண்டுமானால் சேது சமுத்திர கால்வாய் திட்டம் மிக மிக அவசியம் என்று அன்றைய முதல்வர் கலைஞர் வலியுறுத்திபேசினார். 1998-ம் ஆண்டு அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இந்தத் திட்டத்திற்கான பணிகளுக்காக நிதி ஒதுக்கினார்.

கலைஞர் கருணாநிதி- அண்ணா

பா.ஜ.க ஆட்சியில்தான் சேது சமுத்திர திட்டத்துக்கான பாதை எது என தீர்மானிக்கப்பட்டது. 2004-ம் ஆண்டு மத்திய அரசின் ஆட்சி மாறியபோது காங்கிரஸ் தலைமையில் தி.மு.க உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி மலர்ந்தது. அப்போது ரூ.2.427 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் பாதி முடிந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க சார்பில் இந்த திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.

இந்த திட்டத்தை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திடீரென நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு திட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் என்பதையும் சட்டமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். இந்த அரசியல் முட்டுக்கட்டை போடும் செயல் மட்டும் நடக்காமல் இருந்தால், இந்த திட்டம் தொடங்கப்பட்டு பத்தாண்டு காலத்தில் ஏராளமான பயன் கிடைத்திருக்கும். கலைஞர் சுட்டிக்காட்டியது போல நாட்டினுடைய அந்நிய செலவாணி வருவாய் அதிகரிக்கும். தமிழ்நாட்டின் தொழில் வளங்கள் பெருகும். கப்பல்கள் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும்.

தமிழ்நாடு, அண்டை மாநில துறைமுகங்களின் சரக்குகளை கையாளும் திறன் அதிகரிக்கும். சிறு சிறு துறைமுகங்கள் உருவாக்க முடியும். சேது கால்வாய் திட்டத்தின் கீழ் மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவதால், கடல்சார் பொருள் வர்த்தகம் பெருகி அதன் காரணமாக மீனவர்களின் பொருளாதாரம் வாழ்க்கை தரமும் உயரும். மீனவர்களின் பாதுகாப்பை கணக்கில் கொண்டுதான் இந்த திட்டத்தின் காரியங்கள் நடைபெறுகின்றன.

கலைஞர் – ஜெயலலிதா

பாற்கடல் சென்று வர மீனவர்களுக்கு இந்த கால்வாய் வசதி அளிக்கும். இலங்கை உள்ளிட்ட வேறு நாடுகளின் துறைமுகங்களில் இந்திய சரக்குகள் பரிமாற்றம் செய்வது தடுக்கப்படும். நாட்டின் கடலோர பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் இந்தத் திட்டத்தினால் மிக முக்கியமாக 50,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும். இவையெல்லாம் தான் அப்பொழுது கலைஞர் சுட்டிக்காட்டிருந்தார். இவை அனைத்தும் நடக்காமல் போனதற்கான அரசியல் காரணங்களைப் பற்றிப் பேச விரும்பவில்லை.

தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கனவு திட்டமான சேது சமுத்திர கால்வாய் திட்டம் தொடர்புடைய வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவோம் என்று மத்திய பா.ஜ.க அரசு சொல்லிருக்கிறது. ஆனால் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்தது, எந்த மாதிரியான கட்டுமானம் என்பதை கூறுவது கடினம் என்று மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

சேது சமுத்திர திட்டம்

எந்தக் காரணத்தைக் கூறி இதை தடுத்தார்களோ, இப்போது அந்த காரணத்தையே நிராகரிக்க கூடிய வகையிலான நிலைப்பாட்டுக்கு பா.ஜ.க அரசு வந்திருக்கிறது. எனவே, இந்த திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடும் நிகழ்வு. இனியும் இந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் சில சக்திகள் முயல்வதே நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த சட்டமன்றம் கருதுகிறது.

எனவே, தாமதமின்றி மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முன் வர வேண்டும். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும் என்றும் ஒருமனதாக தீர்மானிக்கிறது. சேது சமுத்திர திட்டத்தை போராடியாவது செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை பேரவையின் சார்பில் நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ” எனத் தெரிவித்திருக்கிறார்.

நயினார் நாகேந்திரன்

முதல்வரின் தீர்மானத்தைத் தொடர்ந்து நடந்த விவாதத்தில் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், “நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறியது எந்த இடத்தில் கட்டுமானம் கட்டுவது எனத் தெரியவில்லை என்றுதான் கூறியிருக்கிறார்கள். சேது சமூத்திர திட்டம் செயல்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. சேது சமுத்திர திட்டம் வருமானால் அதை விட மகிழ்ச்சியான ஒரு செய்தி இருக்க முடியாது.

ஆனாலும், சேது சமுத்திர திட்டம் செயல்படுத்த இருக்கும் பகுதி கடல் ஆழமற்றப் பகுதி. நீரோட்டம் அதிகமுள்ளப்பகுதி. மணல் அள்ள அள்ள மணல் சரிவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதையும் மீறி சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படுமேயானால், நாங்கள் தெய்வமாக நம்பும் ராமர் பாலம் சேதமாகாமல் இத்திட்டம் செயல்படுத்தப்படுமானால் அதற்கு எனது முழு ஆதரவு உண்டு” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.