மகளிருக்கான கட்டணம் இல்லாத பயண திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நாள்தோறும் 40 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்படுவதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், மகளிருக்கான கட்டணம் இல்லாத பயண திட்டம் தொடங்கப்பட்டது முதல், தற்போது வரை 222.51 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று கேள்வி நேரத்தின் போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் கேள்வி ஒன்றை எழுப்பினார்.
அதில், விராலிமலை – துவரங்குறிச்சி வழித்தடத்தில் கூடுதலாக நகர பேருந்துகள் இயக்கப்படுமா? என்று விஜயபாஸ்கர் கேட்டிருந்தார்.
இதற்கு போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்து பேசியதாவது, “உறுப்பினரின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “மகளிருக்கான கட்டணம் இல்லா பேருந்து திட்டத்தில் தற்போது வரை 222.51 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினசரி 40 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்தார்.