நொய்யல் ஆற்றை மீட்கும்வரை ஓய்வு கிடையாது – அன்புமணி ராமதாஸ்

நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் பசுமைத்தாயகம் மற்றும் கொங்கு பகுதியில் உள்ள சமூகத்தொண்டு அமைப்புகள் சார்பில் கோவையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட ஆறுகள் இருக்கின்றன. காவிரி ஆற்றில் தமிழ்நாட்டில் இருந்து, மேற்கு பகுதியில் இருந்து பவானி ஆறு, நொய்யல் ஆறு அமராவதி ஆறு கிளை ஆறுகளாக கலக்கின்றன. 40 ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல் ஆற்றில் உள்ள நீரினை அள்ளி குடிக்கலாம். 2500 ஆண்டுகள் இந்த நொய்யாலாறுக்கு வரலாறு இருக்கிறது. அப்பொழுதே கிரேக்க, ரோமனியர்களுடன் வணிகம் செய்த தொல்லியல் ஆவணங்கள் இருக்கின்றன. 

அதன் பிறகு வந்த சேர சோழ பாண்டியர் மன்னர்களும் நொய்யல் ஆற்றுக்கு தேவையான நீர் மேலாண்மை திட்டங்களை வகுத்து பாதுகாத்து வந்து இருக்கிறார்கள். தற்போது நொய்யல் ஆறு சீர்கெட்டு கிடக்கிறது. நொய்யல் ஆற்றை காப்பாற்றுவது என்பது அரசு தான் செய்ய வேண்டும். அரசை நாம் அனைவரும் இணைந்து செய்ய வைப்போம். நாம் முயற்சி செய்தால், தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், அரசு நிச்சயமாக நிதி ஒதுக்கி நொய்யல் ஆற்றை மீட்க செய்ய முடியும். நொய்யல் ஆற்றின் மூலம் 45 லட்சம் ஏக்கர் அளவிற்கு விவசாயம் ஒரு காலகட்டத்தில் நடந்தது. ஆனால் இப்போது அதில் 35 சதவீதம் மட்டுமே விவசாயம் நடக்கிறது. 

இதனை நாம் 60, 70 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த நிலப்பகுதிக்கு ஏற்ப பயிர்களை நாம் தேர்வு செய்து விவசாயத்தை முன்னுக்கு கொண்டு வர வேண்டும். ‘கொங்கு செழிக்கட்டும்’, ‘கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்’ என்ற அந்த வாசகம் என்னால் மறக்க முடியாத ஒன்று. கொங்கு செழிக்க வேண்டும் என்றால் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டும். நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.