திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மாடுகளை திருடி சென்ற வாகனத்தை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். வந்தவாசி அடுத்த மூடூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் கட்டப்பட்டிருந்த பசுமாடுகளை இரவு நேரத்தில் சரக்கு வாகனத்தில் வந்த மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதை அடுத்து பொதுமக்கள் அந்த வாகனத்தை பல கிலோ மீட்டர் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.
வாகனத்தில் இருந்த ஒருவர் தப்பித்து ஓடிவிட ஓட்டுனரை பிடித்து கீழ்க்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் இரண்டு மாடுகள், கன்றுக்குட்டி மற்றும் அந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் பொது வெளியில் திரியும் மாடுகளை கடத்தி சென்று சந்தையில் விற்றுவருவதை ஓட்டுநர் ஜோதி ஒப்புக்கொண்டார்.
கடந்த ஓராண்டில் மட்டும் வந்தவாசி சுற்றுவட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட மாடுகள் திருடப்பட்டுள்ளன. மாடுகளை திருடியவர் பிடிபட்ட தகவல் அறிந்ததும் மாடுகளை இழந்த உரிமையாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மாடுகளை திருடியவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்து மாடுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்தனர். இதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.