கொரோனா தொற்றுப் பரவலின்போது அதிக அளவுக்கு பணியாளர்களை வேலைக்கு எடுத்த அமேசான் நிறுவனம், தற்போது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. ஏற்கெனவே அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆண்டி ஜாஸ்ஸி, “தற்போது நிச்சயமற்ற பொருளாதார சூழல் நிலவுவதால், 18,000-க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளோம்.

வேலையில் இருந்து நீக்குவது கடினமானது என்பதை நாங்கள் ஆழமாக அறிந்திருப்பதால், அவர்களை ஆதரிக்க நாங்கள் இடைநிலை மருத்துவ காப்பீடு மற்றும் வெளிவேலை வாய்ப்புக்கான ஆதரவுகளை வழங்க உள்ளோம்’’ என்று கடந்த வாரத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியாவில் 1,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்பம், மனிதவளம் எனப் பல துறைகளில் அமேசானில் வேலை செய்பவர்கள் நீக்கப்பட உள்ளனர். பெங்களூரு, குருகிராம், இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள அமேசான் நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பணிநீக்கம் மேற்கொள்ளப்பட்ட ஊழியர்களுக்கு இ-மெயில் மூலமாக அமேசான் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதோடு தற்போது நிலவும் பணி நீக்கச் சூழல் குறித்து தெளிவாக அறிந்துகொள்ள, ஊழியர்கள் ஒருநாள் அலுவலகத்துக்கு வந்து அறிந்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. திடீரென மேற்கொள்ளப்படும் பணி நீக்கத்தால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு 5 மாத சம்பளம் வழங்குவதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளது.
பணிநீக்கம் செய்த போதும், அமேசான் நிறுவனம் மற்ற வகைகளில் உதவுதாக அளித்துள்ள உத்தரவாதத்தால், சிலர் நிம்மதியடைந்திருக்கின்றனர். ஆனால், பல ஊழியர்களின் நிலை கேள்விக்குறிதான்!