புதுக்கோட்டை மாவட்டத்தை அடுத்த முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கைவயலில் பட்டியலின சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் சில வாரங்களுக்கு முன்பு மலம் கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த குடிநீரை அருந்திய மக்கள் பலர் உடல் உபாதைகளுக்கு ஆளானார்கள்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி கொடுமை தொடர்ந்து நடைபெறுவது வெளிச்சத்துக்கு வந்தது. பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றும், இரட்டை குவளை முறையை கடைப்பிடித்தவர்களை கைது செய்தும் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்தது. ஆனால் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் இன்னும் கைது செய்யவில்லை.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஒரு அறிக்கையோ கண்டனமோ தெரிவிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “தொடரும் சமூக அநீதி! புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு விசாரணை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல்துறைக்கு கடும் கண்டனங்கள்!!
வன்கொடுமைகள் எதிர் கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதிதிராவிட நலத்துறை அமைச்சருக்கும் பட்டின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்! என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள தமிழக காவல்துறை வற்புறுத்துவதாக இயக்குனர் பா.ரஞ்சித் குற்றம் சாட்டி இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
தொடரூம் சமூக அநீதி😡!புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடூம் கண்டனங்கள்!!
— pa.ranjith (@beemji) January 13, 2023