சென்னை: தமிழக அரசுப் பணிக்கான தேர்வுகளில் பங்கேற்போர் தமிழ் மொழித் தாளில் 40 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசுப் பணியில் சேர்பவர்கள், அரசுப் பணியாளர்கள் பணி நிபந்தனை சட்டப்படி, மாநிலத்தின் அலுவல் மொழி அல்லது தமிழ்மொழி குறித்த போதிய அறிவுபெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது தமிழில் போதிய அறிவு இல்லாதவர்கள், தகுதி பெற்றிருந்து பணி நியமனம் பெற்றால், பணியமர்த்தப்பட்ட நாளில் இருந்து2 ஆண்டுக்குள் அரசால் நடத்தப்படும் தமிழ் மொழி 2-ம் தாள் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதற்கிடையில், தமிழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாளர்கள் சேர்ப்பில் வெளி மாநிலத்தவர் பங்கேற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகமனிதவள மேலாண்மை துறை சார்பில் கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதில், தமிழகத்தில் உள்ள மாநில அரசுத் துறைகள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் தமிழ் இளைஞர்களை 100 சதவீத அளவுக்கு சேர்ப்பதை உறுதி செய்யும் வகையில், அனைத்து நேரடி போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாள் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ் மொழித் தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்ணுக்கு குறையாமல் எடுத்து தேர்ச்சி பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கி பணியாளர் சட்டத்தில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று அறிமுகம் செய்தார். பின்னர், இதுகுறித்த விவாதம் நடந்தது. அதன் விவரம்:
தி.வேல்முருகன் (தவாக): குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இதே சட்டம் உள்ளது. அங்கெல்லாம் அந்த மாநிலத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள், அந்த மொழிவழி தேசிய இனங்களை சேர்ந்தவர்கள் என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இங்கு கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தம் மூலம், பிஹாரை சேர்ந்தவர் தமிழ் படித்து இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால், தமிழக அரசுப் பணியில் சேர முடியும். எனவே, இதை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: நீதிமன்ற வழக்கு அடிப்படையில், வல்லுநர்களின் கருத்தைகேட்டுதான் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஜி.கே.மணி (பாமக): சட்டத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
முகமது ஷாநவாஸ் (விசிக): இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: தற்போது நிறைவேற்றாவிட்டால், தமிழ் தேர்வே தேவையில்லை என்றாகிவிடும். அதனால், திருத்தம் கொண்டு வந்துள்ளோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
பின்னர், பேரவையில் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது.
இதன்மூலம், பிஹாரை சேர்ந்தவர் தமிழ் படித்து, தேர்வில் தேர்ச்சி பெற்றால், அரசுப் பணியில் சேர முடியும். எனவே, சட்டத் திருத்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும்.