கொழும்பு: இலங்கையில், 2019 ஏப்ரலில், ஈஸ்டர் தினத்தன்று, தாக்குதலைத் தடுத்து நிறுத்தத் தவறியதுக்காக, அப்போது அதிபராக இருந்த மைத்ரிபால சிறிசேனாவுக்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் ரூ.10 கோடி அபராதம் விதித்துள்ளது.
இலங்கையில், 2019 ஏப்ரலில், ஈஸ்டர் தினத்தன்று, தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில், 270 பேர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, உள்ளூர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒன்பது பயங்கரவாதிகள், மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டு, இந்த தாக்குதலை நடத்தியது, விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் நாட்டின் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றான ஈஸ்டர் தாக்குதல் குறித்து நம்பகமான தகவல்கள் இருந்தும், அதனை தடுக்காமல், அந்த அரசாங்கம் மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தின் ஏழு பேர் கொண்ட அமர்வு தனது தீர்ப்பில் தீர்ப்பளித்தது.
இதில் அப்போது அதிபராக இருந்த மைத்ரிபால சிறிசேனாவுக்கு 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் காவல்துறை முன்னாள் தலைவா் புஜித் ஜெயசுந்தர, மாகாண உளவுத் துறை முன்னாள் தலைவா் நளிந்த ஜெயவா்த்தனே ஆகியோருக்கு தலா ரூ.7.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை முன்னாள் செயலா் ஹேமஸ்ரீ பொ்னாண்டோவுக்கு ரூ.5 கோடியும், தேசிய உளவுத் துறை முன்னாள் தலைவா் சிசிரா மெண்டிஸுக்கு ரூ.1 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். இந்த இழப்பீடு தொகையை சம்பந்தபட்டவர்கள் அவர்களின் தனிப்பட்ட நிதியில் இருந்து செலுத்த வேண்டும் எனவும், இந்த இழப்பீடு வழங்குவது குறித்து 6 மாதங்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement