கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ராமர் பாலத்துக்கு பாதிப்பு இல்லாமல் மாற்றுப்பாதை யோசித்துவருவதாக 2018-ல் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. முதல்வர் கொண்டுவந்துள்ள தீர்மானத்தில் சேது சமுத்திர திட்டம் 4-ஏ அலைன்மென்ட் தீர்மானமா, ராம சேதுவுக்கு பாதிப்பு இல்லாத புது மாற்றுபாதையா என திட்டவட்டமாக சொல்லவில்லை. 4-ஏ அலைன்மென்ட் என்றால் அதை எதிர்க்கிறோம். மத்திய அரசு சொன்ன புதிய திட்டத்தை கொண்டுவந்தால் அதை ஆதரிக்கிறோம். சட்டமன்றக் குழு கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் ராமாயணம் கற்பனை, ராமர் கற்பனை எனச் சொன்னார்கள். இது இங்குள்ள மக்களை புண்படுத்தியிருக்கிறது. இன்னும் சில நாள்களில் இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி சொன்னார்.

சட்டசபையில் முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தில் ஒரு பொய்யையும் அவர் கூறியிருக்கிறார். மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ராமர் சேது பாலம் இல்லை எனச் சொன்னதாக அந்த தீர்மானத்தில் முதலமைச்சர் பொய் கூறியிருந்தார். ஆனால், மத்திய அமைச்சர் அவ்வாறு கூறவில்லை. இது தொடர்பாக ஆராய்ச்சி நடந்து வருகிறது. 18,000 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் இருந்தது. அது ராமர் பாலமா எனத் தெரியாது. அதில் திட்டுகள், கட்டுமானங்கள் உள்ளதாக மத்திய அமைச்சர் கூறியிருந்தார். சட்டசபையில் முதல்வர் பொய்யாகச் சொன்ன தீர்மானத்துக்கு அனைத்து எம்.எல்.ஏ-க்கள் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்காதது கணிக்கத்தக்கது. மற்ற பண்டிகைக்கு விடுமுறை கொடுத்துள்ளார்கள். இது ஓரவஞ்சனை.
தமிழகத்தில் எம்.எல்.ஏ ஒருவர் இறந்திருக்கிறார். இன்னும் அந்த துக்கத்திலிருந்து அவர் குடும்பம் மீண்டு வரவில்லை. அதற்குள் அந்த தொகுதியில் யாருக்கு சீட் என அடித்துக்கொள்கிறார்கள். மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் பண்பு தி.மு.க-வில் இல்லை. நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி தர்மப்படி அது ஏற்கெனவே த.மா.க-வுக்கு ஒதுக்கிய தொகுதி. தி.மு.க-வின் நோக்கம் தினமும் என்னை வம்புக்கு இழுப்பதுதான். சவால்களைச் சந்திக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. சவாலுக்கான காலம் 2024, 2026-ல் வரும். அப்போது அண்ணாமலையை எதிர்த்து நிற்கட்டும். எப்படி இருந்தாலும் தமிழகத்தில் 2024 லோக் சபா தேர்தலுக்குப் பிறகு எத்தனைபேர் கட்சி மாறுகிறார்கள் என்று பாருங்கள். மக்களுக்கு தி.மு.க மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்திக்கும்போது கன்னியாகுமரி மாவட்டத்தின் நான்குவழிச் சாலைப் பிரச்னையை எடுத்துச் சொன்னோம். தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் தாமதமாகின்றன. தமிழக அரசு ஜல்லி, மணல் கொடுப்பது இல்லை போன்ற பல பிரச்னைகளால் பணியின் வேகத்தை குறைக்கிறார்கள். மத்திய அமைச்சராக டி.ஆர்.பாலு இருக்கும்போது போட்டிப் போட்டு வேலை செய்வார்கள். மத்திய அரசு வேலையில் கமிஷன் அடிக்க வேண்டும் என்பதற்காக அப்படி செய்தார்கள். தி.மு.க வந்தபிறகு கனிமவள பிரச்னைகளால் வேலைகள் தாமதம் ஆகின்றன.
டாஸ்மாக்கில் ஒருமாதத்துக்கு 55 லட்சம் கேஸ் முதல் 60 லட்சம் கேஸ்கள் வரை விற்பனையாகிறது. அதில் 30 முதல் 35 லட்சம் கேஸ்கள் தி.மு.க-வினர் நடத்துகின்ற சாராய ஆலையிலிருந்து வருகின்றன. இப்படி இருக்கும்போது தி.மு.க-வால் தமிழகத்தில் மதுவை ஒழிக்க முடியாது. பா.ஜ.க-வால் மட்டும்தான் போதை இல்லா ஆட்சி கொண்டுவர முடியும். தி.மு.க லோக்கல் ஒன்றிய செயலாளருக்கு எவ்வளவு கமிஷன் என்பதை டாஸ்மாக் பாட்டில்தான் முடிவு செய்கிறது. கனிமவளத் துறையில் குறைந்த வருவாய் தற்போது வருகிறது. அதை சரி செய்தால் ஒரு லட்சம் கோடிக்கு மேல் வருவாய் வரும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நான் இங்கு வரும்போது, ஒரு மலையைக் காணவில்லை. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. கனிமவள கொள்ளைக்கு எதிராக பா.ஜ.க மேலும் தீவிர போராட்டத்தை முன்னெடுக்கும்.

தி.மு.க-வுக்கு எப்போதுமே ஒரு எதிரி வேண்டும். தி.மு.க இப்போது கவர்னரை வில்லனாக காட்டி அரசியல் செய்கிறது. ஒவ்வொரு மாதமும் கவர்னரை பற்றி புதுப் புது பிரச்னையை கிளப்புகிறார்கள். 15 சட்ட மசோதாக்களும் கோர்ட்டுக்கு போனால் தடைபடும். அதனால்தான் அதில் கவர்னர் கையொப்பமிடாமல் இருக்கிறார். இதன் காரணமாக கவர்னர் அவமானப்படுத்தப்பட்டார். கவர்னரின் மாண்பை தி.மு.க அரசு கொடுத்துவிட்டது. உரையில் பொய் என்று தெரிந்த சிலவற்றை கவர்னர் வாசிக்காமல் விட்டிருக்கிறார். தி.மு.க தேவையில்லாமல் கவர்னரை சீண்டிபார்க்கிறது. கவர்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேச ஆரம்பித்தால், அரசுக்கு எவ்வளவு பெரிய தர்ம சங்கடம் ஏற்படும். அரசு சீண்டிக்கொண்டிருந்தால் இதுபோல கவர்னர் அமைதியாக இருப்பாரா என எனக்குத் தெரியாது. மேற்கு வங்கம், கேரளா மாநில கவர்னர்கள் பத்திரிகைகளிடம் பேசுகிறார்கள். தமிழக கவர்னரும் அதுபோல பேசினால் என்ன ஆகும். சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு கண்ணை காட்டியதற்கும், பொன்முடி கையை காட்டியதற்கும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
2024-ல் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி, கொள்கை சார்ந்த கூட்டணியாக இருக்கும். தி.மு.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. 2024 தேர்தலில் காஷ்மீரையும் வென்றெடுப்போம், கன்னியாகுமரியையும் வென்றெடுப்போம். கன்னியாகுமரி, காஷ்மீர் ஆகியவை பா.ஜ.க வெற்றியின் நுணியாக இருக்கும். இரண்டில் இருந்தும் வெற்றிப்பயணம் ஆரம்பிக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. 543 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம்” என்றார்.