தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கழனிக்கோட்டை பகுதியை சேர்ந்த அருண்குமார் (29), விக்னேஷ் (23), பிரகாஷ் (20) ஆகிய மூன்று பேரும் விக்னேஷ் உறவினர் வீட்டிற்கு பொங்கல் சீர் கொடுக்க சென்றனர். பின்பு பொங்கல் சீர் கொடுத்துவிட்டு அங்கிருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது ஊமத்தநாடு சாலை வளைவில் திரும்பிய போது, எதிர் திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது இவர்களது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அருண்குமார் மற்றும் விக்னேஷ் ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
மேலும் பிரகாஷ் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மணக்காடு பகுதியை சேர்ந்த கார்த்திக் (26), சதீஷ், செண்பக பாண்டியன் ஆகிய நான்கு பேரும் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்ற மூன்று பேரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.