துணிவு ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்திய PVR… வி.ஆர். மாலில் பரபரப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஜன. 11ஆம் தேதி, அஜித் நடிப்பில் துணிவு படமும், விஜய் நடிப்பில் வாரிசு படமும் வெளியாகின. நேற்றுடன் (ஜன. 14) நான்கு நாளாகிவிட்ட நிலையில், தொடர் விடுமுறை என்பதால் திரையரங்குகளில் இரு படத்திற்கும் குடும்பமாக குடும்பமாக மக்கள் குவிந்துகொண்டிருக்கின்றனர். 

இதில், அஜித் – ஹெச். வினோத் – போனி கபூர் கூட்டணியில் உருவான துணிவு படத்தை, தமிழ்நாடு முழுவதும் 450க்கும் திரையரங்குகளில் ரெட் ஜெய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், சென்னை அண்ணா நகரில் உள்ள வி.ஆர். வணிக வளாகத்தில் உள்ள PVR சினிமாஸிலும் துணிவு படம் திரையிடப்பட்டுள்ளது. 

மீண்டும்… மீண்டுமா…

அதில், நேற்று (ஜன. 14) இரவு 7.15 மணி காட்சியும் வழக்கம்  போல் திரையிடப்பட்டது. படம் தொடங்கிய 15 நிமிடங்களில் படம் நிறுத்தப்பட்ட நிலையில், புரொஜக்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், அதனை சீர்செய்து மீண்டும் திரையிடல் தொடங்கிய நிலையில், சிறிது நேரத்திலேயே மீண்டும் கோளாறு ஏற்பட்டது. இதனால், படம் பாதிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், ரசிகர்கள் திரையரங்க நிர்வாகிகளிடம் முறையிட்டனர். 

ஒருகட்டத்தில், பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியதால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் திரையரங்குக்கு வந்தனர். அங்கு நிர்வாகிகளுடன் இணைந்து ரசிகர்களை அமைதிப்படுத்த முயன்றனர். நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர்தான், டிக்கெட் பணத்தை திருப்பி அளிப்பதாக PVR நிர்வாகம் ஒப்புக்கொண்டது. 

இருப்பினும், ஆன்லைனில் புக்கிங் செய்தவர்களுக்கு முழு பணம் திருப்பி தரப்பட இயலாது என்றும் ஆன்லைன் சார்ஜ் செய்யப்பட்டு மீதம் உள்ள தொகையை வாங்க விரும்புவோர் திரையங்கிலேயே வாங்கிச்செல்லலாம் என கூறியதால் மீண்டும் பிரச்னை வந்தது. ஆன்லைன் சார்ஜ் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் வரும். மேலும் அப்படி பிடித்தம் இன்றி முழு தொகையும் வேண்டுமென்றால், சில நாள்கள் காத்திருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

‘இது முதல்முறையல்ல…’

அதாவது, இதுபோன்று இதற்கும் முன்னும் இதே திரையரங்கில் சில மாதங்களுக்கு முன் ஒரு திரைப்படம் ரத்து செய்யப்பட்ட போது, ஆன்லைனில் டிக்கெட் செய்திருந்தால் பணம் உங்கள் வங்கி கணக்குக்கு வந்துவிடும் என நிர்வாகத்தினர் கூறி அனுப்பிவைத்துள்ளனர். 

ஆனால், அந்த டிக்கெட் பணம் கடைசி வரை வரவில்லை என்று தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிய பெண் ஒருவர் நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறதா பலரும் குற்றச்சாட்டு வைத்தனர். ரசிகர்களின் தொடர் வாக்குவாதத்தை அடுத்து, ஆன்லைனில் டிக்கெட் வாங்கியவர்களுக்கும் டிக்கெட் பணம் முழுமையாக திருப்பி தரப்படும் என நிர்வாகத்தினர் உறுதியளித்தனர். 

விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் வந்தவர்கள் படத்தை முழுதாகவும் பார்க்காமல் பார்க்கிங் செலவு, பயண செலவு, நேர விரயம் போன்றவற்றால் ஏமாற்றமடைந்து வீடு திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.