நாக்பூர்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் நாக்பூர் அலுவலகத்திற்கு இன்று மூன்று முறை தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்டிராவின் நாக்பூரைச் சேர்ந்தவர் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. இங்கு இவருக்கு அலுவலகம் உள்ளது. இந்நிலையில், இந்த அலுவலகத்தின் தொலைபேசி எண்ணுக்கு இன்று காலை 11.30 மணிக்கும், 11.40 மணிக்கும் தொலைபேசி மூலம் பேசி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய துணை காவல் ஆணையர் ராகுல் மதானே இதனைத் தெரிவித்தார்.
தொலைபேசி அழைப்பு விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்த ராகுல் மதானே, மிரட்டல் அழைப்பை அடுத்து அலுவலகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பை மேலும் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.