மியான்மரில் தேவாலயங்கள் மீது வான்தாக்குதல்; 5 பேர் பலி

நோபிடாவ்,

மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தை கைபற்றியது. அதை தொடர்ந்து மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தை ராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. ராணுவ வீரர்களின் துப்பாக்கிச்சூட்டில் 1,500-க்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இப்போதும் அங்கு ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் கரேன் பழங்குடியின மக்களின் கிளர்ச்சி குழுவும் ஒன்று. இவர்கள் மியான்மரின் கிழக்கு பகுதியில் தாய்லாந்து நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மியான்மர் ராணுவம் கடந்த வியாழக்கிழமை கரேன் பழங்குடியின மக்கள் வசிக்கும் 2 கிராமங்களில் திடீர் வான்வழி தாக்குதலை நடத்தியது. அப்போது அந்த கிராமங்களில் உள்ள 2 தேவாலயங்கள் மீது போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் 2 வயது பச்சிளம் குழந்தை மற்றும் அதன் தாய் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் டஜன் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.