மதுரை: கொரோனா தாக்கத்தால், இரண்டு பொங்கல்கள் களை இழ்ந்த நிலையில், 2023ம் ஆண்டில் வரும் இந்த தைத் திருநாள் பொங்கல் பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பண்டிகை என்றாலே பூக்களின் தேவை அதிகரித்துவிடும். அதிலும், தைத் திருநாளான பொங்கல் மற்றும் அதன் முன்னரும் பின்னரும் வரும் மங்கலமான நாட்களில், பூஜைக்காகவும், அலங்காரத்திற்காகவும் பூக்கள் அதிகம் தேவைப்படுகிறது. அதிலும் மார்கழி மாதம் முழுவதும் பூக்களுக்கு இருக்கும் தேவை, தையில் இரட்டிப்பாகிறது.
இந்த நிலையில், பூக்களின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பூக்களின் விலையைக் கேட்டால், அதிர்ச்சியளிப்பதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை பூச்சந்தையில் பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. மல்லிகைப்பூ வரத்தில் இல்லாத காரணத்தினால் பிச்சி பூ கிலோ 3000 வரை விற்பனை செய்யப்பட்டது.
இன்று மகர சங்கராந்தி, நாளை பொங்கல் பண்டிகை, தொடர்ந்து காணும் பண்டிகை என தொடர் பண்டிகை காலத்தை மக்கள் மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர். நாடு முழுவதும் உற்சாகமாக களை கட்டியிருக்கும் கொண்டாட்டங்கள், பூக்கள் விலையை அதிகரித்து, திண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பூக்களின் தேவை அதிகமாக இருப்பதால், தமிழகம் முழுவதும் உள்ள பூ சந்தைகளில் விலை உயர்ந்தே காணப்படுகிறது.