அதிகாலையில் செந்நிற கதிரவன் கொண்ட பனிக்கடல், அந்தி மாலையில் மனதை மயக்கும் வண்ண மயம் என குளிர்கால அழகின் உச்சத்தில் கொடைக்கானல் மலைப்பகுதிகள் காட்சியளிப்பதால், பொங்கல் விடுமுறையை கொண்டாட வந்திருக்கும் பயணிகள் களிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகள், தற்பொழுது குளிர்காலத்தின் உட்சபட்ச அழகில் மிளிரத்துவங்கியுள்ளது. அதிகாலை வேளையில், பள்ளத்தாக்கு பகுதிகளில், கடல் போல நிலை கொண்டுள்ள பனிக்கடலில் உதிக்கும் சூரியனும், அதே பள்ளத்தாக்கு பகுதிகளில் அந்தி மாலை வேளைகளில், பல வண்ணங்களாக மாறி மாயம் செய்யும் பனிக்கடலானது, தாழ்வாக நிலை கொண்டுள்ள காட்சிகளும், காண்போர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பொங்கல் தொடர் விடுமுறை நாட்கள், துவங்கியுள்ள இக்காலக்கட்டத்தில், மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா வந்துள்ள பயணிகள், கோக்கர்ஸ் பள்ளத்தாக்கு பகுதிகளில், இவ்வாறான அரிய காட்சிகளை கண்டு உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
இன்னும் சில நாட்களுக்கும் இக்காட்சிகள், பள்ளத்தாக்கு பகுதிகளில் தொடரும் என்பதால், தொடர் விடுமுறைக்கு வரவிருக்கும் பயணிகளும், இக்காட்சிகளை காணும் வாய்ப்பு ஏற்படும் என்று தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
