மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜன.15) தொடங்கியது. போட்டி துவங்கும் முன் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் தினமான இன்று நடக்கிறது.பாலமேட்டில் நாளையும், அலங்காநல்லூரில் வரும் 17-ம் தேதியும் நடக்க இருக்கிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொள்ளக்கூடிய மாடு பிடிவீரர்கள், மாட்டு உரிமையாளர்கள் என அனைவரும் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
போட்டி தொடங்குவதற்கு முன்னர், ”தமிழக பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைக் கொண்டாடிடவும், நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், பேணிக் காப்போம் என்றும் விளையாட்டில் ஈடுபடும் காளைகளுக்கு எவ்வித ஊறும் செய்யமாட்டோம் என்றும் வீரர்களாகிய நாங்கள் சிறந்த நெறிமுறைகளைப் பின்பற்றுவோம் என்றும் விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் சிறு தீங்கும் நேராமல் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு விளையாடுவோம் என்றும் உறுதிமொழிகிறோம்” என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க 1,004 காளைகளும், 318 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அரசுத் தரப்பில், மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 10 உறுப்பினர்கள் அடங்கிய குழுவும், அவனியாபுரத்தைச் சேர்ந்த 16 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவும் இணைந்து நடத்துகின்றனர். இந்த விழாவில், தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், எம்எல்ஏக்கள், அரசு உயர் அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.