பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக புகழ்பெற்ற அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காலையில் தொடங்கி 11 சுற்றுகளாக விறுவிறுப்பாக நடந்துமுடிந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 28 காளைகளை அடக்கி மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த விஜய் முதலிடம் பெற்றுள்ளார். அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி 17 காளைகளை அடக்கி 2ஆம் இடம் பிடித்தார். மதுரை விளாங்குடியைச் சேர்ந்த பாலாஜி 13 காளைகளை அடக்கி 3ஆம் இடம் பிடித்தார்.
முதலிடம் பெற்ற விஜய்க்கு முதலமைச்சர் மு,க ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த கார்த்திக்கிற்கு அமைச்சர் உதயநிதி சார்பில் பைக் பரிசாக வழங்கப்பட்டது. 3ஆம் இடம் பிடித்த பாலாஜிக்கு பசுமாடு பரிசாக வழங்கப்பட்டது.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த விஜய் ஊடகங்களிடம் பேசுகையில், “ஆள்மாறாட்டத்தை தடுக்க ஆன்லைன் முறை கொண்டுவந்தாலும் எங்களுக்கு இந்த முறை பிடிக்கவில்லை. கடைசிவரை எனக்கு டோக்கன் கிடைக்கவில்லை. இரண்டு முறை சிறந்த பரிசு வாங்கியிருக்கிறான் என்று கூறி ஒரு அண்ணன் கடைசி நிமிடத்தில்தான் டோக்கன் கிடைக்க உதவிசெய்தார். இதற்கு முன்பு ஆள்மாறாட்டம் நிறைய நடந்திருக்கிறது. அதற்கு கமிட்டி மூலமாக டோக்கன் கொடுத்தால் நன்றாயிருக்கும். ஆன்லைன் முறை என்பதால் யார் யாரோ டோக்கன் பெறுகிறார்கள்.
மேலும் இ-சேவை மையம் சென்றால் பதிவுசெய்ய 200 ரூபாய் கேட்கிறார்கள். படிக்காதவர்கள் என்ன செய்வார்கள்? முதலமைச்சர் சார்பில் கார் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அமைச்சர் மூர்த்தி ஐயாவிடம் நன்றி சொல்லவிருக்கிறேன். எனக்கு கடைசிவரை உடன் இருந்து உதவிய என் அண்ணனுக்கு நன்றி சொல்கிறேன். அவரால்தான் இந்தமுறை வென்றுள்ளேன்” என்றார். முதல் பரிசை வென்ற விஜய், மின்வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இரண்டாம் பரிசாக பைக் வென்ற கார்த்திக் பேசுகையில், ”நான் கொஞ்சம் கொஞ்சமாக விளையாடலாம் என நினைத்திருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக 3ஆம் பேட்சிலிருந்து வெளியே அனுப்பிவிட்டார்கள். இல்லாவிட்டால் முதல் பரிசை வென்றிருப்பேன். ஆன்லைன் மூலம் டோக்கன் கொடுத்ததால் எனக்கு முதலில் கிடைக்கவில்லை. நேற்றிரவுதான் கிடைத்தது. கடந்த ஆண்டு உள்ளூர் மாடுகளை பிடிக்கிறார்கள் என்று கூறியதால்தான் இந்த ஆண்டு வேறு மாடுகளை பிடித்தேன். அதனால் எனது முதல் பரிசு வாய்ப்பு போய்விட்டது” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
