தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசு கொடுத்த உரையிலிருந்தவற்றில் சிலவற்றை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் தவிர்த்ததன் காரணமாக தி.மு.க-வும், அதன் கூட்டணி கட்சிகளும் அவரை பதவி விலக வலியுறுத்தி கடுமையாக விமர்சித்து வருகின்றன.

அந்த வரிசையில் தி.மு.க தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர், விருகம்பாக்கத்தில் நடந்த பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை மிரட்டும் தொனியில் அவதூறாக விமர்சித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவின.
அதைத் தொடர்ந்து, ஆளுநரின் இணைச்செயலாளர் பிரசன்னா ராமசாமி, ஆளுநரை அவதூறாகப் பேசியதன் காரணமாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிவுசெய்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் தி.மு.க-வின் தலைமை, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இதுகுறித்து தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை வடக்கு மாவட்ட தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கழக கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் காவல்துறை தரப்பிலிருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.