மகாராஷ்டிரா மாநிலத்தில் தமிழர்களுடன் சேர்ந்து மண்ணின் மைந்தர்களான மராட்டியர்களும் பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்தியாவின் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் தமிழர்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடியது குறித்து ஒரு சிறப்பு தொகுப்பினை காணலாம்.
இயற்கையோடு இணைந்த வாழ்வை மேற்கொண்ட தமிழர்கள் அந்த இயற்கைக்கு நன்றி தெரிவிக்க பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் திருவிழாதான் பொங்கல் திருநாள். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பொங்கல் தினத்தை கொண்டாட தமிழர்கள் தவறுவதில்லை. அதே நேரம் அந்த கொண்டாட்டங்கள் உற்சவங்களையும் தொற்றிக்கொள்ளும் என்பதில் சந்தேகமும் இல்லை.
அப்படி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தமிழர்கள் உடன் சேர்ந்து மண்ணின் மைந்தர்களான மராட்டியர்களும் பொங்கல் வைத்து கொண்டாடினர். தாராவில் உள்ள 90 அடி சாலையில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் சாலையில் அமர்ந்து பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொண்டாடினார்.
நம்ரடா ஷிண்டே என்ற அந்த பெண் கூறுகையில், ”நான் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். எனக்கு 21 வயது ஆகிறது. நான் பட்டப்படிப்பு படித்துள்ளேன். பொதுவாக மகாராஷ்டிராவில் எங்கள் பாரம்பரிய பண்டிகைகளை நாங்கள் கொண்டாடுவோம். ஆனால் இந்த முறை பொங்கலுக்கு வந்திருக்கிறேன். எனது நண்பர்களும் நிறைய பேர் பொங்கல் கொண்டாடுகிறார்கள். இந்த நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்களைப் போலவே ஆந்திரா, தெலங்கானா, கேரளா, உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் தமிழர்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து இயற்கையை வழிபட்டனர்.
தெலங்கானாவைச் சேர்ந்த மற்றொரு பெண் கூறுகையில், “நான் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர். மும்பையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கிறேன். கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பை வாழ் தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழ்கிறேன். இது எனக்கு எப்போதும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாகவே இருக்கிறது. என் குடும்பத்துடன் ஆண்டுதோறும் பொங்கல் கொண்டாட வருகிறேன்” என்றார்.
பொங்கல் வைப்பது எப்படி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தமிழர்கள் சொல்ல சொல்ல, அதன்படியே இந்த பிற மாநில மக்களும் வெல்லமும் அரிசியும் கலந்து தித்திக்கும் பொங்கலை செய்து இறக்கினர்.
– நிரஞ்சன் குமார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM