கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அதிர்ச்சியில் கணவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கோடிபுதூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி (21) என்பவருக்கும், கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மன வேதனை அடைந்த பிரியதர்ஷினி வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்த லட்சுமணன் அதிர்ச்சி அடைந்து அவரும் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக லட்சுமணனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்து போலீசார் பிரியதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.