தெலுங்கு ரசிகர்களையே ஓவர் டேக் செய்யும் பாலிவுட்! இந்தியில் சக்க போடு போடும் வாரிசு!

விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், அஜித் நடித்த துணிவு திரைப்படமும் வெளியானது என்னவோ ஜனவரி 11 ஆம் தேதி ஆக இருக்கலாம், ஆனால் இந்த இரண்டு படங்கள் குறித்த பேச்சும், விவாதமும் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது. ஒரு மாதமாக இரு படங்கள் தரப்பில் நடைபெற்ற, கொடுக்கப்பட்ட விளம்பரங்களால் இரு படங்களுக்குமான எதிர்பார்ப்பு இதுவரை இல்லாத அளவிற்கு உச்சக்கட்டத்தை அடைந்தது. இதில் கூடுதலாக வாரிசு படத்திற்குத்தான் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு காரணமாக பல விஷயங்கள் அமைந்தது.

வாரிசு நேரடி தமிழ் படமா அல்லது தெலுங்கு படமா என்ற சர்ச்சை எழுந்தது. அது தயாரிப்பாளர் தில் ராஜ்ஜை வைத்து சுற்றி சுழன்றது. அடுத்து தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோ விஜய் என தில் ராஜ் ஒரு புயலை கிளப்பிவிட்டது. இதற்கெல்லாம் உச்சமாக தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் பேசியது. இதனையெல்லாம் தாண்டி இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அனைத்தும் வைரல் ஆனது. இவையெல்லாம் சேர்ந்து வாரிசு படத்திற்கு நல்ல ஹைப் கொடுத்தது. இருப்பினும் ஒரு சின்ன எச்சரிக்கை மணி அடித்தது போல் வாரிசு ட்ரெய்லர் வந்தபோது இருந்தது. ’என்ன ட்ரெய்லர பார்த்தா ஒரே சீரியல் வாடை அடிக்கிறது; ஒருவேளை படமும் அப்படிதான் இருக்குமோ?’ என எண்ண தோன்றியது.

இவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜனவரி 11 ஆம் தேதி வெளியான வாரிசு படம் யாரை ஏமாற்றியதோ தெரியாது, விஜய் ஃபேன்ஸைதான் அதிக அளவில் ஏமாற்றி இருக்கக்கூடும். 500 ரூபாய், 1000 ரூபாய் கொடுத்து முதல் நாள் படம் பார்த்த ரசிகர்கள், ‘என்னடா கதையில் புதுசா எதுவுமே இல்லையே, ஒரே டப்பிங் சீரியல் மாதிரி இருக்கு, சிஜி கூட இப்படி கேவலா பண்ணி இருக்காங்க, இண்ட்ரோ சீன் கூட வெயிட்டா இல்லை, திரைக்கதை இவ்வளவு சொதப்பலா இருக்கு’ என புலம்பினர். விஜய் ரசிகர்களின் ஒரு தரப்பு வாரிசை ஆஹோ ஓஹோ வென கொண்டாடவும் தவறவில்லை. படம் செம்ம, மாஸ், சான்ஸே இல்லை இப்படியான வார்த்தைகளால் தியேட்டர் வாசலில் புகழ்ந்து தள்ளினர். இருப்பினும், விமர்சகர்கள் பெரும்பாலும் வாரிசு படத்தை சற்றே கழுவி ஊத்தினர். துணிவு படம் அவரேஜ் என்றால், வாரிசு பிலோ அவரேஜ் என்றே பலரும் சொன்னார்கள். 

image

ஆனால், இதனையெல்லாம் தாண்டி வாரிசு படத்தை தன்னுடைய தோளில் சுமந்தார் விஜய். அவருடைய நடிப்புக்காகவும், ஹியூமர் சென்ஸ், சண்டை ஆகியவற்றிற்காக மட்டும் தொய்வில்லாமல் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. துணிவு படமும் நிறைய லேக் இருப்பதால் பெரிய வெற்றி என்று சொல்லமுடியாத அளவில் இருக்கிறது. ஆனாலும், வாரிசை விட கொஞ்சம் துணிவு நன்றாகவே இருப்பதாக விமர்சனங்கள் இதுவரை வந்துள்ளன.

இத்தனை விமர்சனங்கள் எதிர்மறையாக வந்த போது வாரிசு படத்திற்கு கூட்டம் குறைந்த பாடில்லை. ஜென்ரல் ஆடியன்ஸ் கூட்டம் வாரிசு படத்திற்கு வந்த வண்ணமே உள்ளார்கள். துணிவு படத்திற்கும் வருகிறார்கள் என்றாலும் இத்தனை விமர்சனங்களை தாண்டியும் வாரிசு படத்திற்கும் கூட்டம் குவிகிறது. இங்கு குறிப்பாக ஒரு வீடியோவை சொல்லியே ஆகணும். தியேட்டரில் இருந்து வெளியே வரும் ஆடியன்ஸ் இடம் மீடியாக்கள் சில பேட்டி எடுக்கும் வீடியோ தான் அது. அந்த வீடியோவில் பைக்கில் வரும் ஆடியன்ஸ் ஒருவர் வாரிசை பற்றிய தன்னுடைய அதிருப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அருகில் காரில் குடும்பத்துடன் ஒருவர் வந்திருந்தார். பைக்கில் வந்தவர் சொன்ன விமர்சனத்தை பார்த்ததும் காரில் இருந்தவர் இறங்கி வந்து வாரிசுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார். அந்த காரில் அவரது மனைவி குழந்தைகள் இருந்தனர். அந்தப் பேட்டியில் அனைவரும் வாரிசு படம் தங்களுக்கு பிடித்ததாக சொல்லி இருந்தனர். குறிப்பாக விஜய்யின் டான்ஸை புகழ்ந்து தள்ளினர். நிச்சயம் பிளாக் பஸ்டர் என்றும் சொன்னார்கள்.

தமிழ் நாட்டில் இரண்டு விதமான விமர்சனங்கள் நம்மை குழப்ப மடைய செய்ய, தமிழ் மொழியை தாண்டி மற்ற இடங்களில் இருந்து வரும் தகவல்கள் சற்றே மலைக்க வைக்கிறது. அதாவது, தமிழ்நாட்டை தாண்டியிலும் வாரிசு படத்திற்கான வரவேற்பு மற்ற மாநிலங்களிலும் தாறுமாறாக இருப்பதாக தகவல்கள் வருவதுதான். கேரளாவில் நடிகர் விஜய்க்கு பெரிய அளவில் ஃபேன் பேஸ் இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். எதிர்பார்த்த அளவிற்கு இல்லாவிட்டாலும் குறைவில்லா அளவிற்கு வசூல் கிட்டும் என்றே அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

image

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஜனவரி 11 ஆம் தேதி வெளியிட முடியாமல் போனாலும் நேற்று (ஜன.14) வெளியாக பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கு ஆடியன்ஸ் தமிழ் ரசிகர்களே பொறாமை படும் அளவிற்கு கொண்டாடி தீர்ப்பது போல் நேற்று முழுவதும் சோஷியல் மீடியாவில் வீடியோக்கள் குவிந்தன. தியேட்டர் வாசலில் தெலுங்கு ஆடியன்ஸ் கொடுத்த பேட்டிகளும் வைரல் ஆனது.

இந்த வரிசையில் தற்போது இந்தி ஆடியன்ஸும் இணைந்து இருக்கிறார்கள். பாலிவுட் மார்க்கெட்டில் வாரிசு படத்திற்கு ஓரளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முழுவதுமாக இல்லாவிட்டாலும் நிறைய இடங்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வாரிசு ஓடுகிறது. டிக்கெட் புக்கிங்கை பலரும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.

image

ஜனவரி 13 ஆம் தேதி இந்தியில் வெளியான நிலையில், முதல் நாளில் 80 லட்சம் ரூபாய் வசூல் செய்தாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இரண்டாவது நாளான நேற்று வரவேற்பு கூடியதால் வசூலில் அது பிரதிபலித்தது. சனிக்கிழமை மட்டும் ரூ1.50 கோடி வசூல் ஆனது. இன்றும் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் வாரிசு படம் ஓடும் திரையரங்குகளில் கூட்டம் அதிக அளவில் வந்ததாக தெரிகிறது. அதனால், முதல் இரண்டு நாட்களை காட்டிலும் வசூல் இன்னும் கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, மூன்று நாட்களில் 5 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனிடையே #varisuhindi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கிலும் இருந்தது.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆடியன்ஸை மட்டுமே குறிவைத்து வாரிசு திரைப்படம் எடுக்கப்பட்ட நிலையில், இந்த இரண்டு மொழிகளை தாண்டியும் வசூலை குவித்து வருகிறது. இதனால், தமிழ் நாட்டில் துணிவு படத்திடம் சற்றே பின் வாங்கி இருந்தாலும் ஒட்டுமொத்தமாக உலக அளவில் வாரிசு படமே அதிக வசூலை குவிக்க வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.