தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைத்து தரப்பட்ட மக்களும் சாதி மத பேதமின்றி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர். இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கோலப்போட்டி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பொன்முடி பரிசு வழங்கினார்.
இதனை அடுத்து விழா மேடையில் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்பொழுது மேடையில் இருந்த அமைச்சர் பொன்முடி நடனம் ஆடினார். இதனை கண்ட கழக உடன்பிறப்புகளும் அமைச்சருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.