தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா வெகு சிறப்பாக தமிழகம் மட்டுமல்லாது தமிழர்கள் நிறைந்திருக்கும் இடங்களில் எல்லாம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே வாசலில் குடும்பத்துடன் பொங்கலிட்டு மகிழ்ந்து வருகின்றனர். இதில் பள்ளி மாணவர்களும் குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பொங்கல் விடுமுறை அறிவித்துள்ளது. ஜனவரி 15 ஆம் தேதி முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை தமிழக அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படிருக்கிறது.
ஜனவரி 15 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு படையலிட்டு நன்றி தெரிவிக்கும் விதமாக சூரிய பொங்கலும், ஜனவரி 16 ஆம் தேதி விவசாயத்துக்கு உதவியாக இருக்கும் ஆடு மாடுகளுக்கு பொங்கலும் வைக்கப்படுகிறது. 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காணும் பொங்கலன்று உற்றார் உறவினர் வீடுகளுக்கு சென்று விருந்து சமைத்து சாப்பிடுவார்கள். இதனைக் கருத்தில் கொண்டு விடுமுறை அறிவித்துள்ள தமிழக அரசு, வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் விதமாக ஜனவரி 18 ஆம் தேதியை பொதுவிடுமுறையாகவும் அறிவித்துள்ளது.
பொங்கல் முடிந்தவுடன் பள்ளி திரும்பும் மாணவர்களில் 12 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும். இடையில் ஒருமாதம் மட்டுமே இருக்கும் நிலையில் மார்ச் 12 ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்க இருக்கிறது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6, 2023 முதல் பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது. இந்த ஆண்டு மட்டும் 18.8 லட்சம் மாணவர்கள் தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கின்றனர்.