ஜல்லிக்கட்டில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

ஜல்லிக்கட்டு போட்டியின்போது நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிவிப்பில், ‘மதுரை மாவட்டம், பாலமேட்டில் இன்று (16.1.2023) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த .இரா.அரவிந்தராஜ் (வயது 24) என்பவரும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், நவல்பட்டு பகுதி சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த புதுக்கோட்டை மாவட்டம், களமாவூர் கிராமம், கண்ணகோன்பட்டியை சேர்ந்த அரவிந்த் (வயது 25) என்பவரும் எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை கேட்டு மிகவும் வேதனை உற்றேன்‌.

இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திருச்சி சூரியூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் பகுதியில் காளை புகுந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக புதுக்கோட்டை மாவட்டம், கண்ணகோன்ப்பட்டி, களமாவூர் பகுதியை சேர்ந்த பார்வையாளர் அரவிந்த் ( வயது 25 ) மீது காளை முட்டியபோது அவரது வலது கை, மார்பகத்தில் மாட்டின் கொம்பு குத்தியதால் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோன்று, மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரரான பாலமேடு பகுதியை சேர்ந்த அரவிந்த் ராஜன், காளை முட்டியதில் படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.