தஞ்சை பெரிய கோயில் மகரசங்கராந்தி விழா | 2 டன் எடையில் நந்தியம்பெருமானுக்கு காய்கனிகள், இனிப்புகளால் அலங்காரம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயில், மகரசங்கராந்திப் விழாவை முன்னிட்டு, 2 டன் எடையில் காய்கள், பழங்கள், இனி்ப்புகள் உள்ளிட்ட பொருட்களால் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் பொங்கல் பண்டிகையான நேற்று (ஜன.15) மாலை, நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களாக கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, மாட்டு பொங்கலான இன்று (ஜன.16) அதிகாலை பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

பின்னர் காலை 9 மணிக்கு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், கேரட், நெல்லிக்காய் போன்ற பல்வேறு காய்கறிகள், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பழங்கள், லட்டு, அதிரசம், ஜாங்கிரி, முறுக்கு என பலவகையான இனிப்பு பதார்த்தங்கள் மற்றும் மலர்கள் என 2 டன் எடையில் பொருட்களை கொண்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து நந்தியம் பெருமானுக்கு முன்பாக, 108 பசுக்களுக்கு சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டு துணி போர்த்தப்பட்டு கோ பூஜைகள் நடைபெற்றது.

விழாவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, பெரிய கோயில் சதய விழா குழுத் தலைவர் து.செல்வம், துணைத் தலைவர் சி.மேத்தா, அறநிலையத்துறை உதவி ஆணையர் கோ.கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிறகு, நந்தியம் பெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர் சுவாமி தரிசனம் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.