தனது அறக்கட்டளையின் வாரிசாக மகனை அறிவித்தார் லலித் மோடி

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி தான் நடத்திவரும் அறக்கட்டளையின் சொத்து வாரிசாக அவரது மகன் ருசிர் மோடியை அறிவித்துள்ளார்.

லலித் மோடியின் தந்தை கே.கே.மோடி தனது பெயரில் குடும்ப அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்தாா். அதில் அவரின் மனைவி பினா, மகள் சாரு, மகன்கள் சமீா், லலித் மோடி ஆகியோா் உறுப்பினா்களாக இருந்தனா். கே.கே.மோடி காலமானதற்கு பிறகு அறக்கட்டளையின் சொத்துகளை நிா்வகிப்பதில் உறுப்பினா்களிடையே பிரச்னை ஏற்பட்டது.

இந்தப் பிரச்னை தொடா்பாக சிங்கப்பூா்நடுவா் நீதிமன்றத்தில் லலித் மோடி முறையிட்டாா். இதற்கு எதிராக பினா, சாரு, சமீா் ஆகியோா் டெல்லி உயா்நீதிமன்றத்தில் முறையிட்டனா். குடும்ப சொத்து விவகாரம் தொடா்பாக சிங்கப்பூரில் தீா்வு காண லலித் மோடி முயற்சிப்பதற்கு அவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், லலித் மோடி தனது மகன் ருசிர் மோடியை, கே.கே.மோடி குடும்ப அறக்கட்டளையின் கிளை அறக்கட்டளையான எல்கேஎம் அறக்கட்டளையின் வாரிசாக இன்று அறிவித்திருக்கிறார்.

image
இதுகுறித்து லலித் மோடி ட்விட்டரில் வெளியிட்ட கடிதத்தில், “நான் கடந்து வந்த பாதையின் வெளிச்சத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கும், என் வாரிசுகளை வளர்த்துவிடும் நேரமும் வந்துவிட்டது. எல்கேஎம் கிளையின் உறுப்பினர்கள் இனி கே.கே. மோடி குடும்ப அறக்கட்டளையின் பயனாளிகளாக இருப்பார்கள். எனது மனைவி மினல் மோடியின் மரணத்திற்குப் பிறகு, எங்களது இரண்டு பிள்ளைகளான ருச்சிர் மற்றும் அலியா ஆகியோர் கேகே மோடி குடும்ப அறக்கட்டளையின் பயனாளிகளாக இருப்பார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த சில ஆண்டுகளாக தனது தாயார் மற்றும் சகோதரி ஆகியோருடனான சட்டப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக லலித் மோடி தெரிவித்துள்ளார்.

image
முன்னதாக, ஐபிஎல் போட்டிகளின்போது நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு லலித் மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து வெளியேறிய அவர், லண்டனில் தஞ்சம் புகுந்தார்.  அவரை நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கைகளும் தொடர்ந்து வருகின்றன.

இதனிடையே, சில நாட்களுக்கு முன் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட லலித் மோடிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு முறை கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். ஏர் ஆம்புலன்ஸ் மூலம் லண்டனுக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ள அவருக்கு இன்ஃப்ளூயன்ஸா மற்றும் நிமோனியா பாதிப்பும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உதவியுடன் தாம் இருப்பதாக லலித் மோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.