மதுரை: மதுரை அருகே பாலமேட்டில் இன்று கோலாகலமாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. இந்த போட்டியில் மொத்தம் 860 காளைகள் ஆரவாரமாக களமிறங்க, 355 மாடுபிடி வீரர்கள் அஞ்சாமல் எதிர்கொண்டு, தமிழர்களின் வீரத்தை பறைசாற்றினர். திமிறி எழும் காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்கினர்.
இதில் 23 காளைகளை அடக்கிய மதுரை சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் முதலிடம் பிடித்தார். சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட தமிழரசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கி 2-ம் இடம் பிடித்த பாளமேட்டை சேர்ந்த மணிகண்டனுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.
தைப்பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களில் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு முதலிடம். பொங்கல் திருநாளன்று, மதுரை அவனியாபுரத்திலும், அடுத்த நாளான மாட்டு பொங்கல் தினத்தன்று மதுரை பாலமேட்டிலும், அதற்கு மறுநாள் காணும் பொங்கலன்று மதுரை அலங்காநல்லூரிலும் என தொடர்ந்து 3 நாட்கள், ஜல்லிக்கட்டு நடைபெறும்.
மாட்டுப்பொங்கல் திருநாளான இன்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விமரிசையாக நடந்தது. இன்று காலை 7.45 மணியளவில் முதல் நிகழ்ச்சியாக அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் மதுரை கலெக்டர் அனீஸ் சேகர் உறுதி மொழியை வாசிக்க, மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து, ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தார்.
முன்னதாக வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 50 பேர் கொண்ட மருத்துவ குழுவினர், மாடுபிடிவீரர்களின் உடல்தகுதியை பரிசோதனை செய்து, ஜல்லிக்கட்டுக்கு அனுமதித்தனர். கால்நடைத் துறை இணை இயக்குநர் விவேகானந்தன் தலைமையில் குழுவினர், காளைகளை பரிசோதனை செய்து, தகுதி சான்றிதழ் வழங்கினர்.
முதலில் அய்யனார் கோயில், முத்துமாரியம்மன் கோயில் காளைகள் ஜல்லிக்கட்டு திடலில் அவிழ்த்து விடப்பட்டன. கோயில் காளைகள் என்பதால் யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த முரட்டுக் காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. காலை 8 மணிக்கு முதல் சுற்றுக்கு 100 பேர் என மாடுபிடி வீரர்களும் இறக்கி விடப்பட்டனர்
மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திர நாயர், மதுரை தெற்கு காவல் உதவி ஆணையர் சாய் பிரணீத் ஆகியோர் தலைமையில் 1,300 போலீசார் அவனியாபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.