அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது: ஓபிஎஸ் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் எழுத்துப்பூர்வ வாதம்

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ‘ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்கியவுடன் அவர் கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக அதிமுக விதிகளின்படி, 5ல் 1 பங்கு உறுப்பினர்கள் கோரிக்கையின் அடிப்படையில் பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் உண்டு. அதன்படிதான் கடந்த ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. மேலும் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு விவகாரத்தை பொருத்தமட்டில் கட்சியின் விதிகள் எந்த ஒரு இடத்திலும் மீறப்படவில்லை.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் கட்சியின் செயல்பாடுகள் முடங்கி உள்ளது. நிர்வாக ரீதியிலான பிரச்னைகளை ஏற்படுத்தவே இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் அனைத்து தரப்பு ஒப்புதலுக்கு பிறகுதான் நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டார். குறிப்பாக அதிமுக பொதுக்குழு நடந்த தினத்தன்று, கட்சி தலைமை அலுவலகத்தில் நுழைந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியும், ஆவணங்களை கொள்ளையடித்தும் சென்றார்கள். இதனால் அந்த பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது.

இதையடுத்து சட்டம்-ஒழுங்கை காக்கும் விதமாக சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர், கலவரம் தொடர்பாக ஆய்வு செய்தார். இதையடுத்துதான் அதிமுக தலைமை அலுவலகத்தின் பாதுகாப்பு கருதி அதனை பூட்டி வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே நீதிமன்றங்களிலும், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திலும் தவறான தகவல்களை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொடுத்து வருகிறனர்.

அதனை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள கூடாது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியது அதிமுகவின் உட்சபட்ச அதிகாரங்களை கொண்ட ஒரு அமைப்பான அதிமுக பொதுக்குழு தான். அதற்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு. அதனடிப்படையில்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அதிமுக, இரட்டை இலை சின்னம் உள்ளிட்டவைக்கு உரிமை கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தை அணுகவும் உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்.

அதிமுக பொதுக்குழு விவகாரத்தை பொருத்தமட்டில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர விசாரணை நடத்திய பின்னர் தான் தெளிவாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதனால் அதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் மிகவும் அற்பத்தனமான ஒன்று என்பதால் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.