அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அன்னலட்சுமிகளின் காளைகள் அட்டகாசம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமானவை.

அந்த வகையில் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி இன்று காலை தொடங்கி உற்சாகமாக நடைபெற்று முடிவடைந்தது. 26 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதிகளவில் பெண்கள் வளர்த்த காளைகள் பங்கேற்று வெற்றிபெற்றன.

காணும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி காலை 7.30 மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணி வரை 10 சுற்றுக்களாக நடைபெற்றது. இந்த போட்டியில் 825 காளைகளும், 303 மாடுபிடி வீரர்களும் களம் கண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

போட்டியில் வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்து மாடுபிடி வீரர்களை சிதறிடித்து காளைகளே அதிகளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று பரிசுகளை அள்ளி சென்றன.

போட்டியில் 26 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதியை சேர்ந்த அபி சித்தர் என்ற மாடுபிடி வீரருக்கு ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான ஒரு நிசான் காரும், ஒரு பசு மாடும் வழங்கப்பட்டது.

இதே போன்று களத்தில் சிறப்பாக விளையாடிய புதுக்கோட்டை கைக்குறிச்சியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரின் காளைக்கு 7 லட்சம் மதிப்பிலான ஒரு நிசான் மேக்னட் காரும், பசுமாடு ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

இதையடுத்து 2வது இடம்பிடித்த மாடுபிடி வீரரான 20 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் ஏனாதி பகுதியை சேர்ந்த அஜய் என்ற வீரருக்கு ஷைன் பைக் பரிசும்,

மூன்றாவது இடம் பிடித்த 12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரரான அலங்காநல்லூரை சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கு ஸ்கூட்டி ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

இதேபோல் சிறந்த காளையாக இரண்டாம் இடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம் எம்.எஸ்.சுரேஷ் என்பவரது காளைக்கு ஷைன் பைக் பரிசாகவும்,

3வது சிறந்த காளையான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வெள்ளம்பழம்பட்டி பட்டானி ராஜா என்பவரது காளைக்கு ஸ்கூட்டி பரிசாகவும் வழங்கப்பட்டது

மாடுகுத்தியதில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் காவல்துறையினர் என 53 பேர் காயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக 10பேர் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த போட்டியினை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கைதட்டி ஆராவாரத்துடன் உற்சாகமாக பார்வையிட்டனர்.

போட்டியில் கலந்துகொண்ட அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் சிறப்பாக காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு தங்க நாணயம், பீரோ, கட்டில், லேப்டாப், சைக்கிள், பணம், சேர், உள்ளிட்ட ஏராளமான பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன.

போட்டியில் அதிகளவிற்கு பெண்களால் வளர்க்கப்பட்ட காளைகள் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்ட நிலையில் சென்னகரம்பட்டி செல்வராணி, ஆனையூர் மாணவி தீப்தி, மதுரையை சேர்ந்த வேதா, ஆனையூர் ஐராவதநல்லூர் யோகதர்சினி ஆகியோரது காளைகள் வெற்றிபெற்று ஏராளமான பரிசுகளை தட்டிசென்றன.

இதேபோன்று காவல்துறையினர் சார்பில் அவிழ்க்கப்பட்ட காளைகளும் பரிசுகளை தட்டிசென்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.