'எங்கள தடுக்க நீங்க யாரு..?' – ஆளுநரை கிழித்து தொங்க விட்ட முதல்வர்!

டெல்லி சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவை சரமாரியாக விமர்சனம் செய்தார்.

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசுக்கும், துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கும் இடையே தொடக்கம் முதலே முட்டல் மோதலாக உள்ளது.

டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால், எந்தவொரு திட்டத்திற்கும் ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டும். அந்த வகையில் ஆம் ஆத்மி அரசு அனுப்பும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா காலம் தாழ்த்தி வருவதாக அக்கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் இன்று, டெல்லி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. காலம் மிகவும் சக்தி வாய்ந்தது. எங்கள் அரசு மக்களை துன்புறுத்தாது. நிரந்தரமாக ஆட்சியில் இருப்பேன் என்று நினைத்தால் அது நடக்காது. இன்று நாங்கள் டெல்லியில் ஆட்சியில் இருக்கிறோம். அதே போல் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளோம். நாளை மத்தியில் கூட ஆட்சி அமைப்போம்.

ஆசிரியர்களை பயிற்சிக்கு அனுப்பும் திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநர் இரண்டு முறை எதிர்ப்பு தெரிவித்தார். இது அவரது நோக்கங்கள் நல்லதல்ல என்பதைக் காட்டுகிறது. துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா எனது தலைமை ஆசிரியர் அல்ல. மக்கள் என்னை முதலமைச்சராக தேர்ந்தெடுத்து உள்ளனர். துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. பாஜகவினர் முதலாளித்துவ மனபான்மை உடையவர்கள். அதே போல் அந்த குணம் டெல்லி துணை நிலை ஆளுநருக்கு உள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த டெல்லி மாநகராட்சித் தேர்தலில், தன்னால் தான் பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றதாகவும், தான் இல்லை என்றால், 20 இடங்களைக் கூட கைப்பற்றி இருக்காது என்றும், துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா என்னிடம் தெரிவித்தார். மேலும், எதிர் வரும் மக்களவைத் தேர்தலில் ஏழு தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்றும் என்னிடம் அவர் கூறினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.