சுடர் விட்டு நிமிறும் குடிசை இசை! தாராவியின் இலக்கணத்தை மாற்ற துடிக்கும் இளம் இசைபுயல்கள்!

திறமைக்கு இடம் பொருள் ஏவல் என்பதெல்லாம் கிடையாது. அந்த கூற்றிற்கு ஏற்ப உலகின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியிலிருந்து நவீன ராப் இசை மூலமாக கவனம் ஈர்த்து வருகின்றனர், அங்கு வாழும் சில தமிழ் இளைஞர்கள். யார் அவர்கள்? என்ன செய்கிறார்கள் என்பது குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு தான் இது.
தீபமானது கோட்டையில் ஏற்றப்பட்டாலும் சரி, குடிசையில் ஏற்றப்பட்டாலும் சரி, அது கொடுக்கக்கூடிய ஒளியானது ஒன்றுதான் என்பது ஒருவரின் திறமைக்கும் சாலப்பொருந்தும். அப்படி மும்பையின் தாராவி பகுதியில் இருந்து ஒளி வீசி வீசுகின்றனர் இந்த இசைக்குழுவினர்.
”வல்லவன் வி பாசில்ஸ்” என்ற பெயரில் பதின்ம வயதைச் சேர்ந்தவர்கள் முதல் 25 வயது வரையிலானவர்களை வைத்து ஒரு குழுவாக செயல்படும் இவர்கள், தாராவி குறித்தும், தாராவியில் தங்களது வாழ்க்கை முறையை குறித்தும், தங்களது எதிர்கால கனவுகள் குறித்தும் நவீன ராப் இசை மூலமாக உலகத்தின் பார்வைக்கு வெளிகாட்டி வருகின்றனர்.
image
இந்த இசைக்குழுவில் தமிழ் இளைஞர்களுடன் சேர்ந்து உள்ளூரில் இருக்கக்கூடிய மராட்டி மாநில இளைஞர்களும் இணைந்து, தமிழ், மராட்டி, ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் வங்காளம் முதலிய பல மொழிகளில் பாடல்களை தாங்களாகவே உருவாக்கி பாடல்களுக்கு இசை மூலம் உயிர் கொடுக்கின்றனர். ”இசை என்ற அந்த ஒற்றை புள்ளிதான்” எங்களை ஒன்று சேர்த்திருக்கிறது என்று கூறுகின்றனர், குழுவில் இடம் பெற்றுள்ள இசை மைந்தர்கள்.
தங்களுடைய இசைக்குழுவினை குறித்து பேசியிருக்கும் அவர்கள், பொதுவாக தாராவி குறித்து தவறான கண்ணோட்டமே வெளி உலகில் இருப்பவர்களுக்கு இருக்கிறது. அதனை எங்களது இசை மூலமாக மாற்ற நாங்கள் முயற்சிக்கிறோம் என நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
image
மேலும் பல்வேறு மொழிகள் ஒரே பாடலில் இடம்பெறுவதால், மற்ற குழுக்களில் இருந்து இவர்கள் சற்று தனித்து தெரிகின்றனர். இதனால் பொதுமக்களிடமும் தொடர்ந்து இவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வெறும் பாடல் மட்டுமில்லாமல் பீட்பாக்ஸிங் என்று அழைக்கப்படும் வாயின் மூலமாக இசைக்கருவிகளின் சத்தத்தை எழுப்பும் முறையையும் இவர்கள் கடைபிடிப்பது, இவர்களுக்கு மேலும் சிறப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
image
இசைக்குழுவில் இருக்கும் சிட்டேஷ் என்ற இளைஞர் கூறும்போது, “இதுதான் எங்கள் குழு. எங்களுக்கு இங்கு நிறைய அன்பு கிடைக்கிறது, அதற்காகத்தான் நாங்கள் பாடி வருகிறோம். ஆரம்பத்தில் தனித்தனியாக செயல்பட்ட நாங்கள், தற்போது இசையின் மூலமாக ஒன்றிணைந்து இருக்கிறோம். இதுதான் எங்களது பலமாகவும் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
image
வறுமை ஒரு பக்கம் இருந்தாலும் அதனை சமாளித்து சாதிக்கும் கனவுகள் மறுபக்கம் இந்த இளைஞர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. ராப் இசை மூலம் தாராவியின் முகத்தை மாற்ற போராடும் இசை போராளிகளாகவே உருவெடுத்திருக்கின்றனர் இந்த இசையாளர்கள்.
– நிரஞ்சன் குமார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.