திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும், உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, ஐதராபாத், புதுடெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு உள்ளதாக தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, திருச்சி விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் மூலம் சோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.
மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில் விமான நிலையத்தில், வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
இதற்கிடையே தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விமான நிலைய போலீசார் மற்றும் விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.