ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது!

Erode East Bypolls: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி அடுத்த மாதம் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும். முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவா் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா. வெறும் 46 வயதே ஆன இவர், கடந்த ஜனவரி 4 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அனைத்து அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். இதைத் தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்பொழுது நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கூறுகையில், பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் எனத் தெரிவித்தார். மேலும் நாகலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும் மற்றும் நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்தும் அறிவிப்பையும் வெளியிட்டார்.

7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கும், மகாராஷ்டிராவில் 2 இடங்களுக்கும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாவட்டத்தில் அமலுக்கு வந்தன. மேலும் நகராட்சி ஆணையர் சிவக்குமார் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவரம்

மனுத்தாக்கல் தொடக்கம் : ஜனவரி 31

மனுத்தாக்கல் கடைசி நாள் : பிப்ரவரி 7

மனுக்கள் பரிசீலனை : பிப்ரவரி 8

வாபஸ் பெற கடைசி தேதி : பிப்ரவரி 10

வாக்குப்பதிவு : பிப்ரவரி 27 

வாக்கு எண்ணிக்கை : மார்ச் 2

சட்டசபை தேர்தல் விவரம்

திரிபுரா -பிப்ரவரி 16 
வாக்கு எண்ணிக்கை : மார்ச் 2

நாகலாந்து -பிப்ரவரி 27
வாக்கு எண்ணிக்கை : மார்ச் 2

மேகாலயா – பிப்ரவரி 27
வாக்கு எண்ணிக்கை : மார்ச் 2

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.