சென்னை, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
அந்தவகையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதீர் மற்றும் திலீப் உள்ளிட்டோர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன் சத்திரம் அருகே கொத்துக்காரர் தோட்டம் பகுதியில் தங்கி அருகிலுள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில், ஏழு பேர் கொண்ட கும்பல் ஒன்று கடந்த 14-ந் தேதி சுதீர் மற்றும் திலீப் தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
அதன் பின்னர் அவர்களிடம் இருந்த ரூ.5,200 பணத்தைப் பறித்துக்கொண்டு இது போதாது என்று தெரிவித்து, அவர்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை கூகுள் பே பணபரிமாற்றத்தின் மூலம் அனுப்புமாறு ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, அவர்கள் இருவரும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக கூகுள் பே மூலம் பெற்ற ரூ.40 ஆயிரத்தை அந்த கும்பலுக்கு அனுப்பினர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சுதீர் மற்றும் திலீப் இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஏழு பேரில் ஐந்து பேரை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.