‘எங்க அப்பா யாருன்னு தெரியும்ல.?’ – பாஜக தலைவரின் மகன் வீடியோ வைரல்.!

தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய்குமார், கரீம்நகர் தொகுதி எம்.பி. ஆவார். இவரது மகன் சாய் பகீரத் ஹைதராபாத்தில் உள்ள மஹிந்திரா பல்கலைக்கழகத்தில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். இந்தநிலையில் சாய் பகீரத், சக கல்லூரி மாணவரை தகாத வார்த்தைகளால் திட்டி பலமுறை அறைந்த வீடியோ சமூக ஊடகங்களில் நேற்று வைரலாக பரவியது.

பகீரத் மற்றும் அவரது நண்பரும் இணைந்து அந்த மாணவரை கண்மூடித்தனமாக தாக்குவதை வீடியோவில் பதிவாகியுள்ளது. பாஜக தலைவரின் மகன், அந்த மாணவரிடம் மற்றவர்களுக்கு இதை தெரியப்படுத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டி, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் யாராலும் எதுவும் என்னை செய்ய முடியாது என்றும் சாய் பகீரத் கூறிவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து சாய் பகீரத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெலங்கானா காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “மஹிந்திரா பல்கலைக்கழக வளாகத்தில் சக மாணவரை தகாத வார்த்தைகளால் திட்டியும் அடித்தும் துன்புறுத்தியதாக, சாய் பகீரத் என்ற மாணவர் மீது புகார் வரப் பெற்றது. அதன்பேரில், ஹைதராபாத் புறநகரில் உள்ள துண்டிகல் போலீசார் செவ்வாய்க்கிழமை கிரிமினல் வழக்கு பதிவு செய்தனர்.

பகீரத் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 341 (தவறான நடத்தை), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 504 (அமைதியை கெடுக்கும் வகையில் வேண்டுமென்றே அவமதிப்பு செய்தல்) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது’’ என அவர் கூறினார்.

இந்தநிலையில் சாய் பகீரத் அடித்ததாக கூறி பாதிக்கப்பட்ட ஸ்ரீராம் என்ற இளைஞர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “நான் ஒரு மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்ததால் பகீரத் என்னை அடித்தார். அதிகாலை 4 மணிக்கு அந்த மாணவிக்கு போனில் அழைத்து என்னை காதலிக்குமாறு கூறினேன். அப்போது பகீரத்துக்கு இது தெரியவந்தது. பின்னர், என்னை அழைத்து கண்டித்தார்.

நான் அவரிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டேன். இதையடுத்து, என்னை அவர் தாக்கினார். நான் தவறு செய்ததை ஒப்புக் கொண்டுவிட்டேன். நானும் பகீரத்தும் நண்பர்கள் ஆகிவிட்டோம். இது முடிந்துவிட்டது. எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. நடந்தது நடந்து விட்டது. எங்களை பிரிக்கும் நோக்கில் அந்த வீடியோ சமூவ வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது” என்றார்.

இந்தநிலையில் தெலங்கானா முதல்வரின் பழிவாங்கும் நடவடிக்கை என பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘ எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையிலும், எனது மகனின் எதிர்காலத்தை நாசமாக்கும் வகையிலும், ஆளும்கட்சியினர் இந்த வீடியோக்களை வேண்டுமென்றே சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். தெலங்கானா முதல்வரின் பழிவாங்கும் நடவடிக்கை.

சம்பந்த இருவரும் நண்பர்கள் என்பது தெளிவாகியுள்ளது. முதல்வரும், அவரது மகனும் எனது அரசியலை சமாளிக்க முடியாமல் கீழ்த்தரமான வேலைகளை செய்யத் தொடங்கிவிட்டனர்’’ என அவர் கடுமையாக தெலங்கானா முதல்வரை தாக்கியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.