ஒன் பை டூ

பரந்தாமன், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க

“முதல்வர் உண்மைநிலையைச் சொல்லியிருக்கிறார். ஆட்சியைத் தக்கவைப்பதில் மட்டுமே கவனம் செலுத்திய அ.தி.மு.க-வினர், மக்களுக்கான எந்த நல்ல திட்டத்தையும் கொண்டுவரவில்லை. அரசின் நிர்வாகத்தையும் சீர்குலைத்தனர். மாநில அரசின் கடன் சுமையை வரலாறு காணாத அளவுக்கு ஏற்றியிருக்கின்றனர். தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு தளபதியின் சீர்மிகு நிர்வாகத்திறனால் குறுகியகாலத்திலேயே தமிழ்நாட்டின் பணவீக்கம் ஐந்து சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. இதற்கு தி.மு.க ஆட்சியில் சமூகநலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியதுதான் காரணம். மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டித் திட்டம், மகளிருக்கு இலவசப் பேருந்து எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, அ.தி.மு.க அரசைக் காட்டிலும் 4,000 கோடி ரூபாய் கடனை திராவிட மாடல் அரசு குறைத்திருக்கிறது. முன்பு, தொழில்துறையில் 13-வது இடத்திலிருந்த தமிழ்நாடு, தற்போது 3-வது இடத்துக்கு வந்திருக்கிறது. தி.மு.க-வின் ஆட்சி நிர்வாகத் திறமைக்கு இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. ஆட்சிக்கு வந்த 20 மாதங்களில் 80 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். கூடிய விரைவில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். வெற்று அறிவிப்புகளை வெளியிடும் அ.தி.மு.க-வினருக்கு, தி.மு.க குறித்துப் பேச அருகதை இல்லை.’’

பரந்தாமன், பாபு முருகவேல்

பாபு முருகவேல், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், அ.தி.மு.க

“இது வெறும் வாயில் வடை சுடும் வேலை மட்டுமே. தி.மு.க., அரசு நிர்வாகமென்றால் என்னவென்று தெரியாமல் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த தாலிக்குத் தங்கம், மானிய விலையில் இரு சக்கர வாகனம், மாணவர்களுக்கு மடிக்கணினி என எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு நிறுத்திவிட்டது. இதையெல்லாம் செயல்படுத்தியிருந்தால் கூடுதலாக 64,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருப்பார்கள். அதேபோல, தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் சொன்ன குடும்பத்தலைவிகளுக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை, சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்த 40,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருப்பார்கள். ஏற்கெனவே இருந்த திட்டங்களையும் நிறுத்திவிட்டு, புதிதாக எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாமல், குறைவாகக் கடன் பெற்றிருக்கிறோம் என்று பெருமையடித்துக் கொள்வது ஆட்சிக்கு அழகல்ல. இவர்களின் பில்லியன் டாலர், ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமெல்லாம் வெறும் வாய்ஜாலம். பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றி வருவதுபோல, வாய்க்கு வந்த எண்ணிக்கையைச் சட்டமன்றத்தில் படித்திருக்கிறார்கள். நடைமுறையிலிருந்த, நல்ல திட்டங்களையெல்லாம் நாசமாக்கிவிட்டு, `நாங்கள்தான் அனைத்தையும் செய்தோம்’ என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.