கொச்சி: கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரலில் கேரள சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவர் நஜீப், பெரிந்தல்மன்னா தொகுதியில் 38 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து மார்க்சிஸ்ட் கூட்டணி வேட்பாளர் முஸ்தபா கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கேரளாவின் பெரிந்தல்மன்னா நகரில் உள்ள கருவூலத்தில் 3 வாக்குப் பெட்டிகளில் 348 வாக்குகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்த வாக்குப் பெட்டிகளை உயர் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக தேர்தல் அதிகாரிகள் நேற்று முன்தினம் கருவூலத்துக்கு சென்றனர். அங்கு 2 வாக்குப்பெட்டிகள் மட்டுமே இருந்தன. ஒரு பெட்டியை காணவில்லை. மாயமான அந்த பெட்டியை தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக தேடினர். ஒரு நாள் தேடலில் 22 கி.மீ தொலைவில் உள்ள கூட்டுறவுத் துறை இணை பதிவாளர் அலுவலகத்தில் மாயமான வாக்குப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 3 வாக்குப் பெட்டிகளும் உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. வாக்குப்பெட்டி மாயமாகி, கண்டுபிடிக்கப்பட்டது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.