டேராடூன்: கட்டுமானப் பணிகள் மற்றும் சீதோஷ்ண நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், உத்தராகண்டின் ஜோஷிமத் நகரம் பூமியில் புதைந்து வருகிறது. மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மாநில அரசும் மேற்கொண்டு வருகிறது. ஜோஷிமத் நகரில் பாதிக்கப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் பணியையும் மாநில அரசு தொடங்கியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த குழுவினர் விரிசல் விழுந்த பகுதிகளை 2 நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். இதனிடையே, ஜோஷிமத் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தில் இந்திய – சீனா எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வீரர்களில் ஒரு குழுவினர் ஜோஷிமத் பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். உத்தராகண்ட் மாநில நிர்வாகத்துடன் இணைந்து பேரிடரை சமாளிக்கவும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.