திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நேற்று கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இதனால் ரத வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் சுப்பிரமணியரை தரிசனம் செய்து விட்டு வீடுகளுக்கு சென்று பொங்கலிட வேண்டும் என்பதால் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். மறுநாள் (16ம் தேதி) மாட்டு பொங்கலன்றும் திருச்செந்தூரில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டது. இந்நிலையில் நேற்றுடன் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்தது. இன்று முதல் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்பட உள்ளன.
இதையொட்டி நேற்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரலாறு காணாத கூட்டம் காணப்பட்டது. கோயில் வளாகம், கடற்கரை, ரதவீதிகள், பஸ் நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே தென்பட்டனர். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தி பாதயாத்திரையாக வந்ததால் கோயில் வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால் ரதவீதிகள் மற்றும் காமராஜர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலையை கடப்பதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு சில பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கால்நடைகளையும் பாதயாத்திரையாக கோயிலுக்கு அழைத்து வந்திருந்தனர். வாகனங்களில் வந்திருந்தவர்கள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தி விட்டு சென்றதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் அவற்றை ஒழுங்குப்படுத்தினர். கோயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.