தூக்க மருந்து விற்பனை… ஃபார்மசிகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை!

மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்தினர்.

அதில் சென்னை, திருவான்மியூர் கடற்கரை சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் வலிநிவாரணி மருந்துகள் பெருமளவில் வாங்கி, உரிய விற்பனை ரசீதுகள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

எனவே புலனாய்வு பிரிவு, மருந்துகள் ஆய்வாளரால் அந்த மருந்துக்கடைக்கு வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் அக்கடையின் மீது சட்ட நடவடிக்கையும் துவக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அம்மருந்துக் கடையின் உரிமம் இரத்து செய்யப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள், மனநோய் மற்றும் தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்க மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை ரசீதுகளுடன் விற்பனை செய்ய வேண்டும் என்று மருந்து கட்டுப்பாடு இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.

தெருவுக்கு ஒன்றெனும் கணக்காய், மருந்து கடைகள் பெருகிவி்ட்ட நிலையில், தொழில் போட்டியை சமாளிக்க இப்படி ரசீதுகள் இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்வது, தலைவலி, காய்ச்சல் என்று வருபவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்து, மாத்திரைகளை தருவது போன்ற பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வியாபாரத்தை மருந்து கடைகள் செய்து வருகின்றன.

மேலும் அப்பல்லோ, மெட்பிளஸ் போன்ற காரப்பரேட் மருந்து நிறுவனங்களின் வருகைக்கு பிறகு சிறிய மருநது கடைகளில் விற்பனை வெகுவாக குறைந்துவிட்டதால் அந்த கடைகளின் உரிமையாளர்கள் செல்ஃபோன் ரீசார்ஜ் செய்யும் பணியை மேற்கொள்ளும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.