"நான் பகிர்ந்த வீடியோ போலியானது. அவரிடம் மன்னிப்பு கேளுங்க!"- பாபர் அசாம் சர்ச்சையில் நடந்தது என்ன?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம், சக கிரிக்கெட் வீரர் ஒருவரின் காதலியுடன் மெசேஜ் செய்வதும், ஆபாசமாகப் பேசுவதுமான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியானது. இது பல இந்திய மீடியாக்களிலும் ஒளிபரப்பப்பட, இதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த வீடியோவில், “நீ என்னுடன் தொடர்ந்து ஆபாசமாகப் பேசிக் கொண்டு இருந்தால் உனது காதலனை நான் அணியிலிருந்து நீக்க மாட்டேன்” என்று அவர் கூறுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இவை இணையத்தில் வைரலாகி பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பிப் பேசுபொருளானது. பல ஊடகங்களும் இதனைச் செய்தியாக வெளியிட்டிருந்தனர்.

பாபர் அசாம்

அவர் யாருடைய காதலி என்பது குறித்தோ, அந்த வீரரின் பிற விவரங்கள் குறித்தோ எதுவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்படவில்லை. ‘இது பொய்யான தகவல், சமூக ஊடகங்களில் தவறாகப் பகிரப்பட்டு வருகிறது’ என்று பலராலும் கூறப்பட்டு வந்த நிலையில் அது போலிதான் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

‘Dr Nimo Yadav’ என்ற போலி ட்விட்டர் அக்கவுன்ட்டில் (Parody Account) இருந்துதான் இந்த வீடியோ முதலில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பகிர்ந்த நபரே ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாபர் அசாம் குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி வீடியோவைப் பகிர்ந்து ஊடகங்களை விமர்சித்துள்ளார். “ஊடகங்கள் நான் வெளியிட்ட வீடியோ உண்மையானது தானா என்று சரிபார்க்காமல் பாபர் அசாம் குறித்து தவறான செய்திகளை வெளியிட்டுள்ளது” என்று அவர் அதில் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நான் பகிர்ந்த இந்த வீடியோ போலியானது. அது பகடி செய்வதற்காகப் பகிர்ந்தவை. அதன் உண்மைத் தன்மையை ஊடகங்கள் ஆராயவில்லை. இதனால் பாபர் அசாமிடம் அவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்ற அந்தத் தனியார் செய்தி நிறுவனத்தையும் டேக் செய்துள்ளார்.

‘Dr Nimo Yadav’ என்ற அந்தப் போலி ட்விட்டர் அக்கவுன்ட், தற்போது ஊடகங்களின் அவசரத் தன்மையை, பொறுப்பின்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது என்று சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். வேறு சிலர் பாபர் அசாம் குறித்து பொய்யான தகவலைப் பகிர்ந்ததற்காக அந்த நபரைக் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை கமென்ட்டில் தெரிவியுங்கள்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.