பாடம் நடத்தாமல் கழிவறையை சுத்தம் செய்ய சொன்ன ஆசிரியர்கள்: அரசு பள்ளியில் அவலம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிளவிப்பட்டியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய சொல்வதாகவும், பாடம் நடத்தமால் செல்போனில் ஆசிரியர்கள் கேம் விளையாடி வருவதாகவும், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் பள்ளியை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ளது கிளவிபட்டி கிராமம். இங்கு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 33 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், இங்கு பயிலும் பள்ளி மாணவர்களை தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதாகவும், ஆசிரியர்கள் கழிவறையை பயன்படுத்த மாணவர்களை தண்ணீர் எடுத்து வர சொல்வதாகவும் மாணவர்களை அவதூறான வார்த்தைகளால் திட்டி வருவதாகவும், பாடம் நடத்தாமல் ஆசிரியர்கள் செல்போனில் கேம் விளையாடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்ட போது எவ்வித பதிலும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பள்ளியை பூட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பணிக்கு வந்த ஆசிரியர்களை பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதையெடுத்து கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ( தொடக்க கல்வி) சின்னராஜ், தாசில்தார் சுசிலா ஆகியோர் போரட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கிராமத்தினை சேர்ந்த பெரியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பள்ளிக் குழந்தைகளிடமும் கல்வி மாவட்ட அலுவலர் சின்னராஜ் விசாரணை நடத்தினார். பள்ளி கட்டிடம், கழிவறை ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எல்லா பிரச்சினைக்கும் காரணம் பள்ளி தலைமை ஆசிரியர் நீலா ஜெயலெட்சுமி தான் என்பதால் அவரை பணியிடை நீக்கம் செய்வது மட்டுமின்றி, காவல்துறையில் புகார் அளித்து, அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் பள்ளிக் குழந்தைகளும் தங்களது தரப்பு சார்பில் புகார் மனு அளித்தனர்.

இப்பிரச்சினை குறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்வது குறித்து முதன்மை கல்வி அலுவலரிடம் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் (தொடக்க கல்வி) சின்னராஜ் உறுதியளித்தை தொடர்ந்து பெற்றோர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். மேலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.