மதுரையில் இருந்து தேனி மாவட்டம் போடி வரையிலான 90 கிலோ மீட்டர் தூர மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது. முறையான நிதி ஒதுக்கப்படாததால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. போடி மக்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கடந்த 2017ல் மத்திய அரசு மீண்டும் ரூ. 354 கோடி நிதி ஒதுக்கி பணிகளை விரைவு படுத்தியது.
இந்த நிலையில் அகல ரயில் பாதையாக மாற்றும் பணியானது ஒவ்வொரு கட்டமாக முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மே 26 ஆம் தேதி மதுரை-தேனி இடையே தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போடி-தேனி இடையிலான 15 கிலோமீட்டர் அகல ரயில் பாதை பணியும் முடிவடைந்ததை அடுத்து கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனையின் பொழுது பாதுகாப்பு அம்சங்கள் திருப்திகரமாக இருந்ததாக ஆய்வு குழு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் 06701 மற்றும் 06702 ஆகியவையும், சென்னையிலிருந்து மதுரை வரை இயக்கப்பட்ட அதிவிரைவு ரயில்கள் 20601 மற்றும் 20602 ஆகிய ரயில்களை போடி வரை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் பிப்ரவரி 19 முதல் தேனி மாவட்டம் போடியில் இருந்து மதுரை மற்றும் சென்னைக்கு நேரடி ரயில்கள் இயக்கப்படுவதால் தேனி மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.