சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேருரையாற்றினார்.
அப்பொழுது பேசிய அவர் “இலக்கியச் செழுமை மிக்க நமது தமிழ்ப் புத்தகப் படைப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கவும், உலகெங்கிலும் உள்ள சிறந்த அறிஞர்களின் அறிவு செறிந்த படைப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக நமது அரசு சார்பில் மொழிபெயர்ப்பு ஊக்கத்தொகையாக ரூ.3 கோடி வழங்கப்படும். தமிழ்நாட்டில் தமிழாட்சி நடக்கும்பொழுது இது போன்ற பன்னாட்டு புத்தக கண்காட்சி நடப்பது வியப்புக்குரிய விஷயம் அல்ல.
தந்தை பெரியாரின் சிந்தனைகளை உலகம் மொழிகளில் மொழிபெயர்த்து விரைவில் வெளியிட உள்ளோம். சுமார் 150 க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் மற்ற இந்திய மொழிகள் மற்றும் உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்படவுள்ளது” என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.