சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு, தொண்டர்களுக்கு இனிப்புகள், நலத்திட்ட உதவிகளை வழங்கி இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் நேற்று உற்சாகமாகக் கொண்டாடினர்.
அதிமுக நிறுவனரும், முன்னாள்முதல்வருமான எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் விழா நேற்றுகொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் செங்கரும்பு, வாழை மரங்கள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
விழாவில் பங்கேற்க வந்தகட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமியை மகளிர் அணியினர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கட்சிக் கொடி ஏற்றி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அதைத்தொடர்ந்து 106 கிலோ எடையுள்ள ராட்சத கேக்கை வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினர். பின்னர் ஏழை எளியோருக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், அதிமுக கொடிக் கம்பத்தை நடும்போது விபத்தில் உயிரிழந்த மதுராந்தகத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி எஸ்.செல்லப்பன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம், 38 ஆண்டுகளாக டெல்லி அதிமுக அலுவலகத்தில் பணியாற்றி மரணம் அடைந்த என்.சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கினார்.
இந்த விழாவில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், டி.ஜெயக்குமார், காமராஜ், கடம்பூர் ராஜூ, செம்மலை,பா.வளர்மதி, கோகுல இந்திரா,வைகைச்செல்வன், பா.பென்ஜமின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள்.
‘நான் சர்வாதிகாரியல்ல’ – ஓபிஎஸ்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் எம்ஜிஆர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது கட்சியை இணைப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நான் சர்வாதிகாரி இல்லை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்று பதில் அளித்தார்.
பின்னர், ராமாபுரத்தில் உள்ளஎம்ஜிஆர் இல்லத்துக்குச் சென்று,அங்குள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு நடைபெற்ற விழாவில் எம்ஜிஆர் குறித்து நூல்கள் எழுதிய 17 அறிஞர்களுக்கு விருது வழங்கிப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மூத்த தலைவர்பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள்அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி.பிரபாகர் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தனது இல்லத்தில் எம்ஜிஆர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியஅவர், “திமுகவைத் தோற்கடிக்க வேண்டுமென்றால் அதிமுக ஒன்றுபட்டு இருக்க வேண்டும். ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் எங்கள் கட்சிக்காரர்கள். நான் அவர்களை பார்ப்பதற்கு என்ன தயக்கம் இருக்கிறது” என்றார்.

அரசு சார்பில் மரியாதை
அரசு சார்பில், கிண்டி டாக்டர்எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சா.மு.நாசர், மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ஆகியோர் எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை செயலர் ஆர்.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர். வீ.ப.ஜெயசீலன், பல்கலைக்கழக பதிவாளர் அஸ்வத் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்ணா சாலையில் உள்ளஎம்ஜிஆர் சிலைக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து” என்றார்.
தியாகராயநகரில் உள்ள எம்ஜிஆர் இல்லத்தில் எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், செயலாளர் டி.ராமலிங்கம், முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் எம்ஜிஆர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேமுதிக சார்பில் அதன் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் சிலைக்கு மாலையணிவித்து அதிமுக தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்